செல்போன் பார்ப்பதை கட்டுப்படுத்தும் யோகாசனம்!

நன்றி குங்குமம் தோழி

உணவுகளை சாப் பிடுகிறோமோ இல்லையோ… 35 வயதிற்கு மேல் கலர் கலரா… விதவிதமா மாத்திரைகளை சாப்பிடுகிறோம். அதனை தடுக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும் பழக்கவழக்கங்களும் என்றாலும், இதனோடு உடல் பயிற்சி மிகமிக அவசியம். உடல் பயிற்சி செய்வதால் உடலுக்கு வலிமை ஏற்படும். ஆனால், மனதிற்கு?

‘‘உடலானது வெறும் சதை, ரத்த நாளங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல, அதில் மனதிற்கும் பெரும் பங்குண்டு. அதனால்தான் சமீப காலமாக, நன்கு உடல் பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல்களை கொண்டவர்களுக்கும் கூட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நாம் செய்திகளை பார்க்கிறோம். மனதிற்கு தெம்பு மட்டுமல்ல… உற்சாகமும் அவசியம். அதற்கு யோகாசனம் நல்ல ஒரு தீர்வு’’ என்கிறார் பூர்ணிமா. இவர் சாய் யோகாசன மையத்தினை நிர்வகித்து அதன் மூலம் பலருக்கு யோகாசன பயிற்சி அளித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தன் மையத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்தும் பகிர்ந்தார்.

‘‘நோவா உலக சாதனை இயக்கத்துடன் இணைந்து, எங்கள் யோகாசன மையத்தின் சார்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் யோகாசன சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முதலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை ஆதரித்து எட்டு பெண்கள் கண்களை மூடிக் கொண்டு விருட்சாசனம், உத்கட கோணாசனம், திரிகோணாசனம், வீரபத்ராசனம், உட்கட்டாசனம், உத்தனாசனம், பர்வதாசனம், அர்த்த மச்சேந்திராசனம், பாலாசனம், நவாசனம், சேது பந்தாசனம், உத்தன்பதாசனம் ஆகிய 12 ஆசனங்களையும், சின் முத்திரை, வாயு முத்திரை, அபான முத்திரை, குபேர முத்திரை, தியான முத்திரை, யோனி முத்திரை, பத்ம முத்திரை, நமஸ்காரம் முத்திரை ஆகிய எட்டு முத்திரைகளையும் செய்து காட்டி சாதனை படைத்தார்கள்.  ஒவ்வொரு ஆசனமும் உடலில் ஏற்படுத்தும் ஒவ்வொரு பிரச்னைகளை தீர்க்கக்கூடிய வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு, உத்கட கோணாசனம் செய்யும் போது, இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பைக் குறைத்து, வலுப்பெற உதவி புரியும். பர்வதாசனம், முதுகு மற்றும் தோள்பட்டை வலிகளை குறைக்கும். கால்கள், இடுப்பு, வயிறு மற்றும் மார்பு தசைகள் வலுவடையும். இதயத்திற்கும் நல்லது. அதே போல், சேது பந்தாசனம் செய்வதால் தைராய்டு பிரச்னைகள் நீங்கும்.

பிளாங்க், உடலை முழுவதும் மேலே உயர்த்தி, உடலானது தரையில் தொடாமல் தாங்கி இருப்பது. இது செய்வது மிகவும் கடினம். பெண்களால் கடினமான வேலைகளைக்கூட அவர்களின் மன உறுதியால் அதனை செய்துவிட முடியும் என்கின்ற தன்னம்பிக்கைக்காக இதனை ஒரு நிமிடம் செய்து காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து 45 குழந்தைகள் ஒவ்வொருவராக சித்தாசனம், ஜானு
சிரசாசனம், பாசிமோட்டாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பத்மாசனம் முன்னோக்கி மற்றும் பக்க வளைவு, பத்மாசன முறுக்கு, பத்த கோணாசனம், சக்கி சலனாசனம், அகர்ண தனுராசனம், ஏக பாத சிரசாசனம் இதனுடன் சின்முத்திரை, அபான முத்திரை, பிராண முத்திரை, தியான முத்திரை, நாமகர முத்திரை ஆகிய முத்திரைகளை கூர்மையான ஆணிகள் மீது அமர்ந்து நிகழ்த்தினார்கள்.

இதனை ஐந்து முதல் பதினான்கு வயது வரையுள்ளவர்கள் செய்து காட்டியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த ஆசனம் அவர்கள் செய்ய முக்கிய காரணம், சிறு வயது முதலே தங்களின் உடலானது மிகவும் நெகிழ்வாக இருக்கவும், உடலானது தங்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆசனத்தை செய்து காட்டினார்கள். இந்த ஆசனம் உடலில் உள்ள நரம்புகளை தூண்டி அதற்கு அழுத்தம் கொடுப்பதால் உடல் வலுப்பெறும். இதில் செய்யப்பட்ட முத்திரைகள் மற்றும் ஆசனங்கள் பெண்களுக்கு வரக்கூடிய நோய்களை தடுக்கும். மேலும், ஒவ்வொரு முத்திரைகளும் கையில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தினை ஏற்படுத்தி உடலில் உள்ள நோய்களை படிப்படியாக குறைக்க உதவும். குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் இந்த முத்திரைகள் மற்றும் ஆசனங்கள் மூலம் குணப்படுத்த முடியும்.

இன்றைய நவீன உலகில் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை PCOD என்று சொல்லக்கூடிய கருப்பையில் நீர்க்கட்டி சேருதல். அதே போல், வீசிங், தைராய்டு, இடுப்பு வலி போன்ற பிரச்னைகளுக்கும் யோகாசனம் நல்ல தீர்வு தரும். குழந்தைகளுக்கு இந்த பருவத்தில்தான் எலும்புகள் நன்றாக வளரும் பருவம். இப்போதே அவர்கள் ஆசனங்களை மேற்கொண்டு, உடலை வளைப்பதன் மூலம் எலும்புகள் மேலும் ஆரோக்கியமாகும்.

சில குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்ட்டிவ் பிரச்னைகள் இருக்கும். அவர்கள் யோகாசனங்களை செய்வதன் மூலம், கவனச் சிதறல்கள் இல்லாமல் அமைதியாக பாடங்களை கவனிப்பார்கள். இப்போதுள்ள குழந்தைகள் எப்போதும் செல்போன் மற்றும் டி.வியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை தவிர்க்க யோகாசனம் கை கொடுக்கும்’’ என்றார் பூர்ணிமா.உடலுக்குள்ளிருக்கும் உறுப்புகளையும் மனதையும் யோகா செம்மைப்படுத்துகிறது. உணவுப் பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்தி, தினமும் யோகா செய்து வந்தால் ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம்.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

 

Related Stories: