நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை மாற்றத்தால் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

இன்றைய காலத்தில் பெண்களுக்கு அதிகளவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் வாழும் ஒவ்வொரு 22 பெண்களில் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏதாவது கட்டத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்கவும், ஆரம்பத்திலேயே கண்டறிவதும் அவசியம். மார்பக புற்றுநோய் என்பது முன்பு வயதான பெண்களிடம் மட்டுமே காணப்பட்ட நிலையில், தற்போது 30 மற்றும் 40 வயதிலுள்ள இளம் பெண்களிடமும் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. திருமணம் தாமதமாகும் நிலை, குழந்தை பிறப்பை தள்ளிப்போடுதல், பாலூட்டும் காலம் குறைதல், உடல் இயக்கம் குறைதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை வசதிகள் அதிகரித்துள்ளதால், இன்று பல நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றனர். இதன் மூலம் குணமடையும் வாய்ப்பும் மிக அதிகரித்துள்ளது. மார்பக புற்றுநோய் ஏற்பட பல காரணிகள் செயல்படுகின்றன. குடும்ப வரலாற்றில் (தாய், சகோதரி) மார்பக புற்றுநோய் இருந்தால் அதன்காரணமாக ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். பிஆர்சிஏ 1 மற்றும் பிஆர்சிஏ 2 மரபணு மாற்றங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே சமயம், பெரும்பாலான நோயாளிகளில் குடும்ப வரலாறு இருக்காது. உடல் பருமன், உடற்பயிற்சி குறைதல், அதிக கொழுப்பு உணவு, மதுபானம், புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறைகளும் இதற்கு காரணமாக உள்ளது. மேலும், மாதவிடாய் விரைவில் தொடங்குதல், வயதான பிறகே நிறுத்தம் அடைதல், ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்வது போன்றவைகளும் முக்கிய காரணிகளாக உள்ளன.

மாறாக, குழந்தைக்கு பாலூட்டுதல், சீரான உடல் எடை பராமரித்தல், தினசரி உடற்பயிற்சி, பழம் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவை மார்பக புற்றுநோய் பாதிப்பை தடுக்கின்றன. இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் மாதுரி சுதாகர் கூறியதாவது: மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 90 சதவீதம் வரை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் பயம் மற்றும் அறியாமை காரணமாக பலர் தாமதமாக மருத்துவமனைக்கு வருகிறார்கள். மார்பகத்தில் சந்தேகமான கட்டி கண்டறியப்பட்டால், அல்ட்ராசவுண்ட், மாமோ கிராபி, எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். அதன்பின், எப்என்ஏசி அல்லது கோர் நீடில் பயாப்ஸி மூலம் திசு மாதிரி எடுத்து புற்றுநோயை உறுதிசெய்வார்கள். நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய மார்பக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் அப்டமன், எலும்பு ஸ்கேன் அல்லது பிஇடி-சிடி போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.

இது சிகிச்சை திட்டத்தைத் தீர்மானிக்க உதவுகிறது.மார்பக புற்றுநோய் இப்போது ஒரு மரண தண்டனை அல்ல. விழிப்புணர்வு, ஆரம்ப பரிசோதனை, மற்றும் தாமதமில்லா சிகிச்சை மூலம் பெரும்பாலான பெண்கள் முழுமையாக குணமடைகின்றனர். எல்லா பெண்களும் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று ஆரம்பத்தில் கண்டால் உயிர் காக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குனர் பாலாஜி ரமணி கூறியதாவது: கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாக மார்பகம் என்பது தாய்மை மற்றும் பெண்மையை கவுரவிக்கும் அடையாளமாக இருந்து வருகிறது. தாய் பால் என்பது தனது குழந்தைகள் மீதான அவரது பிரதிபலனற்ற அன்பை வெளிப்படுத்துவதோடு, குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி, வளர்ச்சி, முழுமையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

மேலும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது அது மார்பக புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மார்பக புற்றுநோயானது தற்போது பெண்களிடையே அதிகம் காணப்படும் ஒரு நோயாக இருந்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து புற்றுநோய்களும் மரபணு சார்ந்தவை. ஆனால் அவை பரம்பரை சார்ந்தவை அல்ல. இதன் மூலம் அனைத்து கட்டிகளும் நமது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக உருவாகின்றன என்று அர்த்தம். புற்றுநோயை ஊக்குவிக்கும் ஆன்கோஜீன்கள் அல்லது கட்டி அடக்கி மரபணு என்பது உயிரணு பிரிவை ஒழுங்குபடுத்தும் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியை தடுக்கும் ஒரு மரபணு ஆகும். எனவே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பு, பரிசோதனையின் சிறந்த பயன்பாடு, 40 வயதிலிருந்து மேமோகிராம்கள், மார்பக புற்றுநோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறைகள் ஆகியவை இதில் உள்ள நல்ல விஷயங்கள் ஆகும்.

கடுமையான ‘நிலை 4’ மார்பக புற்றுநோய் உள்ளவர்களுக்கும் அதிநவீன மருத்துவ முறைகள் மூலம் குணப்படுத்த முடியும். மார்பக புற்றுநோய் சிகிச்சையில் அதிநவீன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாத்திரை வடிவத்திலும் கூட இவை கிடைக்கும். மேலும் மூலக்கூறு சிகிச்சைகள், கீமோதெரபியின் உட்செலுத்துதல் தொடர்புடைய சிக்கல்களை தவிர்க்க கீமோ-போர்ட் பயன்பாடு, உச்சந்தலையில் குளிர்வித்தல் போன்ற முடி உதிர்தலை குறைக்கும் சிகிச்சைகள் என பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. தற்போது, கதிர்வீச்சு ஆன்காலஜி சிகிச்சையானது, கதிர்வீச்சினால் ஏற்படும் தோல் எதிர்வினைகள் மற்றும் கருமையடைதல் ஆகியவை மிகக் குறைவாக இருக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சையில், பெரும்பாலும் அனைத்து நோயாளிகளுக்கும் முழுமையான மார்பகம் அகற்றப்படுகிறது.

ஆனால் மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சையுடன் ஆன்கோ-பிளாஸ்டிக் மறுசீரமைப்பு நுட்பங்கள் மற்றும் மார்பக உள்வைப்புகள். இவை மார்பக அகற்றுதலை கிட்டத்தட்ட சமன்பாட்டிலிருந்து நீக்கி, சமமான, உண்மையில், சிறந்த உயிர்வாழும் விகிதத்தை அதிகரிக்கின்றன. சமீபத்திடய என்ஜிஎஸ் தொழில்நுட்பம் அனைத்து புற்றுநோய்களிலும் பரம்பரை மற்றும் மரபணு பரிசோதனையை எளிதாக்கியுள்ளது. மேலும் இது இப்போது பரம்பரை நோய் பாதிப்பு அபாயத்தைக் குறைக்கும் அறுவை சிகிச்சைகளைச் செய்ய உதவுகிறது, மேலும் நோயாளியின் மூலக்கூறு வகை மார்பக புற்றுநோய் சிகிச்சையை வடிவமைக்கவும் உதவுகிறது. இந்த இளஞ்சிவப்பு, அக்டோபரில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எதிர்காலம் ரோஜா நிறமாகவும் வண்ணமயமாகவும் மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிகிச்சை முறைகள்
இன்றைய மருத்துவத்தில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பல துறை நிபுணர்கள் இணைந்து செய்யும் பலதரப்பட்ட அணுகுமுறை ஆகும்.

அறுவை சிகிச்சை: ஆரம்பநிலையில் இருந்தால் மார்பகத்தை பாதுகாத்தபடியே கட்டியை அகற்றும் மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சை செய்யலாம். பெரிய கட்டி அல்லது பரவல் இருந்தால் மாற்றியமைக்கப்பட்ட தீவிர முலையழற்சி அவசியமாகும். தற்போது மறுவடிவமைப்பு சிகிச்சைகள் மனநலத்தையும் அழகிய தோற்றத்தையும் காக்க உதவுகின்றன.
கதிர்வீச்சு சிகிச்சை: அறுவை சிகிச்சைக்கு பின் மீதமுள்ள செல்களை அழிக்கப் பயன்படுகிறது.
மருந்து சிகிச்சை: கட்டியை சுருக்கவும், மீண்டும் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.
ஹார்மோன் சிகிச்சை: ஹார்மோன் ரிசெப்டர் பாசிட்டிவ் நோயாளிகளில் தமொக்சிபென் அல்லது அரோமடேஸ் தடுப்பான்கள் கொடுக்கப்படுகின்றன.
டார்கெட்டட் சிகிச்சை: டிராஸ்டுஜூமாப் போன்ற மருந்துகள் எச்இஆர் பாசிட்டிவ் நோயாளிகளில் சிறந்த விளைவுகளை அளிக்கின்றன.
இம்யூனோ சிகிச்சை: புதிய ஆராய்ச்சிகள் மூலம் உடல் பாதுகாப்பு அமைப்பே புற்றுநோயை எதிர்கொள்வதற்கான வழிகளை உருவாக்கின்றன.

3 முக்கிய பரிசோதனை
சுய பரிசோதனை: 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதம் ஒருமுறை தாமே மார்பகத்தை பரிசோதிக்க வேண்டும்.
கட்டி, சுரப்பு, தோல் மாற்றம் போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
மருத்துவர் பரிசோதனை: 30 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளலாம்.
மாமோ கிராபி: 40 முதல் 70 வயதுக்குள் உள்ள பெண்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமோ கிராபி பரிசோதனை செய்ய வேண்டும்.

புகை, மது பழக்கம் கூடாது
பெண்களில் மாதவிடாய் தொடங்கும் ஆரம்ப வயது, தாமதமான மாதவிடாய் நிறுத்தம், கருவுறுதல் குறைதல், தாய்ப்பால் குறைதல் மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சையின் பயன்பாடு போன்ற ஹார்மோன் காரணிகள் ஆகியவை மார்பக புற்று நோய் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன. சமீப காலமாக பெண்கள் புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் என்பது அதிகரித்து காணப்படுகிறது. இதுவும் மார்பக புற்று நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.

Related Stories: