ஸ்கேன் எக்ஸ்ரே அவசியமா?

நன்றி குங்குமம் தோழி

வலி என்றாலே உடனே நம்மில் அதிகமானோர் ஸ்கேன், எக்ஸ்ரே என பல பரிசோதனைகளை செய்யத் தொடங்கி விடுகிறோம். மருத்துவர் பரிந்துரைக்கும் முன்பே கூட பலர் பயந்து போய் தாங்களே மருத்துவர்களிடம் கேட்டு எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குடல், ஈரல், இரைப்பை போன்ற உறுப்புகளில் வலி என்றால் கூட பரவாயில்லை. முதுகு, கழுத்து, மூட்டு போன்ற பகுதிகளில் வலி வந்தவுடன் இப்படி எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்தானா? ஏன், சிறிது காலம் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை தவிர்த்துவிட்டு, அதில் முக்கிய பங்காற்றக்கூடிய இயன்முறை மருத்துவத்தை நாடக்கூடாது? இப்படி பல விஷயங்களை இந்தக் கட்டுரையின் வழியாக தெளிவாக தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

வலி…

வலி என்பது ஒரு அறிகுறிதான். உடலில் எந்த வகையான மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது வலி, காய்ச்சல், அலர்ஜி போன்ற அறிகுறிகள் மூலமாக தெரிகிறது. வயிறு முதல் முதுகு, கால், தலை என அனைத்து விதமான உறுப்புகளிலும் பிரச்னை வெவ்வேறாக இருந்தாலும் வெளியே தெரியும் அறிகுறியாக வலி இருக்கிறது.

வின்னென்று குத்துவது, முள் குத்துவது, மெல்லிய மந்தமானது என வலியில் பல வகைகள் உள்ளது. இதில் வயிறு, குடல், ஈரல் போன்ற உடல் உள் உறுப்புகளில் வரும் வலிகளுக்கு இயன்முறை மருத்துவத்தில் பங்கு இல்லை. அதேபோல, எலும்பு, தசை, ஜவ்வு, மூட்டு போன்ற பகுதிகளில் வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இயன்முறை மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்பதனை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பரிசோதனைகள் அவசியமா..?

எலும்பு, தசை, மூட்டு போன்ற பகுதிகளுக்கு பரிசோதனைகள் முதலிலேயே செய்துகொள்வது அவசியமில்லை. ஏன் வலி வருகிறது என தீர்மானிப்பதற்கு நாம் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகினால் போதும். கட்டாயம் பரிசோதனையில்தான் தெரிந்து கொள்ள முடியும் என இருக்கும் ஒரு சில பிரச்னைகளுக்கும், ஜவ்வு விட்டுப் போய் இருக்கிறது என்றால் எந்த அளவு விட்டுப் போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு நாம் தேர்வு செய்யலாம்.

இயன்முறை மருத்துவமும் வலியும்…

இயன்முறை மருத்துவ பரிசோதனைகளில் வலி எந்த அளவில் இருக்கிறது என்பதற்காக பல ‘வலி அளவுகோல்களை’ வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு பிரச்னைகளின் தீவிரத்தையும் தெரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு தசைகளுக்கும், ஒவ்வொரு மூட்டுக்கும் என்ன வகையான பிரச்னை வரும் என முன்னரே அதற்கான தசை பரிசோதனைகளும் இருக்கிறது. அதனை செய்து காட்ட சொல்வார்கள்.

உதாரணமாக, தோள்பட்டையில் வலிக்கிறது என்றால் நேரே கை தூக்குவது, மேலே தூக்குவது போன்ற பல அசைவுகளை செய்யச் சொல்லி எந்த இடத்தில் வலி, எந்த தசையில், எந்த கோணத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்து கொள்வார்கள். இப்படி எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் துல்லியமாக தெரிந்து கொள்ள பல பரிசோதனைகள், பல பிரச்னைகளுக்கு இயன்முறை மருத்துவத்தில் உள்ளது.

மொத்தத்தில்…

மூட்டு, ஜவ்வு, தசைகளில் வலி இருந்தால் நாம் நேரடியாக இயன்முறை மருத்துவரை அணுகலாம். இதுவே வயிற்று வலி, குடல் வலி போன்ற உடல் உறுப்புகளின் வலிகளுக்கு நாம் பொது மருத்துவரை அல்லது அதற்குரிய சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.பல நேரங்களில் இந்தப் பரிசோதனைகள் இல்லாமலேயே நாம் மருத்துவம் செய்து குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கான பண விரையம்தான் ஆகிறது. கூடவே, நேரமும் விரையம் ஆகிறது. அதற்கான பணத்தை உடற்பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் செலவு செய்வதன் மூலம் நாம் இன்னும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

பல பரிசோதனைகள் நம் முன் இருக்கிறது என்பதற்காக அது அனைத்தையும் நாம் செய்து பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைப்படும் போது மட்டுமே அதனை உபயோகித்துக் கொள்வது நல்லது. அப்படி ஒரு வலி வரும் போது அது ஏன் வருகிறது? அதில் எந்த மருத்துவத்தின் பங்கு உள்ளது? அதற்கு உண்மையில் இவ்வகை பரிசோதனைகள் அவசியம்தானா என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Related Stories: