மோடி அரசை வீழ்த்தும் வரை கம்யூனிஸ்ட் கட்சி ஓயாது ஆர்ப்பாட்டத்தின் போது மகேந்திரன் தகவல்

தஞ்சை, ஜூன்21: பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் மீதான விலை ஏற்றத்திற்கு காரணம் மத்திய அரசு இவற்றின் மீது போட்டுள்ள வரியே. உற்பத்தியாகும் செலவை விட 1 மடங்கு வரி கூடுதலாக போடப்பட்டுள்ளதே இந்த கடுமையான விலை ஏற்றத்திற்கு காரணம். இதை மத்திய அரசு மறைத்து விட்டு கச்சா எண்ணெய் விலை உயர்வே எரிபொருட்களின் விலை உயர்விற்கு காரணம் என்று பொய்யான காரணத்தை கூறுகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் தான் எரிபொருள் விலை கடுமையாக உள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற வரி கொள்கையை அமல்படுத்தியது. இந்த வரி கொள்கையின் கீழ் எரிபொருட்களை கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் போட்டுள்ள வரிகளை ரத்து செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயம் செய்து வந்தது. ஆனால் மோடி அரசு வந்த பின்னர் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து விட்டது. இது தான் கடுமையான விலை ஏற்றத்திற்கு காரணம். ஆடுகளை பாதுகாக்கும் உரிமையை புலிகள் வசம் விட்டால் எப்படி ஆடுகள் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே அரசு, பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து விலை நிர்ணயம் செய்யும் உரிமையை அந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக நடக்கும் மோடி அரசை வீழ்த்தும் வரை கம்யூனிஸ்ட் கட்சி ஓயாது என்றார்.

Related Stories: