அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை தாசில்தார்கள் ஆய்வு செய்ய வேண்டும்: தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை

வேலூர், ஜூன் 19: வேலூர் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை தாசில்தார்கள் ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேலூர் மாவட்டம் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி வீதத்தில் பின்தங்கியுள்ளது. இந்த ஆண்டும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் பொதுத்தேர்வில் கடுமையான சரிவை கண்டுள்ளன. இதுதொடர்பாக முழுமையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கல்வி அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். அப்போது, சரிவர பள்ளிக்கு வராத மாணவர்களே அதிகளவில் தேர்வில் தோல்வி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை தாசில்தார்களும் ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிகளவில் தோல்வி அடைந்திருப்பது தொடர்பாக கலெக்டர் ராமன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் ஆலோசனை நடந்தது. அதில் வருவாய்த்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது, அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பள்ளி தலைமையாசிரியர்கள் தினமும் கண்காணித்து பெற்றோரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தாசில்தார்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் வருகை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்’ என்றனர்.

Related Stories: