வில்லிவாக்கம் அருகே பயங்கரம்; மதுஅருந்த பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி அடித்து கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்

அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கம் மூர்த்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழிலாளி. இவரது தம்பி பிரபாகரன் (27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் கூட்டுகுடும்பமாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், வீடு சிறியதாக இருந்ததால் அருகேயுள்ள திருமலைநகரில் வாடகைக்கு வேறு வீடு பார்த்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் உள்ள பொருட்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு இருவரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 6 பேர் கும்பல், மினி லாரியை வழிமடக்கி மணிகண்டனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், மணி கண்டனை சரமாரி தாக்கிவிட்டு அருகில் கிடந்த செங்கலால் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த தம்பி பிரபாகரனையும் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் போலீசார், படுகாயத்துடன் இருந்த அண்ணன், தம்பி இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபாகரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து 6 பேர் கும்பலை வருகின்றனர். மேலும் மது அருந்த பணம் தர மறுத்ததால் கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: