ஏழாயிரம்பண்ணையில் உள்ள பேருந்து நிலையத்தை முழுமையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்: பயணிகள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் டூவீலர்களை நிறுத்திச்செல்வதால் இடவசதியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது ஏழாயிரம்பண்ணை. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாத்தூர் மற்றும் தாலுகா தலைநகரான வெம்பக்கோட்டையில் இருந்து இப்பகுதி வழியாக கோவில்பட்டி, ராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் தொகை மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் சாத்தூர் - கோவில்பட்டி சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது அப்பகுதியில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் ஏழையிரம்பண்ணை வழியாக சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதற்கிடையே இந்த பேருந்துகள் உதவியுடன் அதிக அளவு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக வெளியூர் சென்று வருகின்றனர்.இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து காத்திருந்து ஆட்களை ஏற்றி செல்வதற்கும், பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கும் பொதிய இடவசதி இல்லாதநிலை உருவாகியுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அத்துடன் இப்பகுதியை சேர்ந்த பலரும் வெளியூர் செல்லும் நிலையில் தங்கள் டூவீலர்களை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் இடவசதி முற்றுலுமாக குறைந்து நெரிசல் அதிகரிக்கிறது. பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கை வசதியும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் பலரும் தரையில் அமரும் நிலை தொடர்கிறது. அதேபோல் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் பேருந்து நிலையம் பரிதவிக்கிறது. எனவே பயணிகள் தங்கள் வானகங்களை பேருந்து நிலையத்தில் நிறுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், இருக்கை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: