கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளை நள்ளிரவில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி முழுவதும் கடந்தாண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதானது. இந்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 50 இடங்களில் சாலை போடும் பணிகளை நடைபெற்று வருகிறது.

பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலம் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் ரூபாய் 13.95 லட்சம் செலவில் நடைபெறும் தெற்கு அவென்யூ சாலை சீரமைப்பு பணியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நள்ளிரவில் ஆய்வு செய்தார். நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் இந்த சாலைகள் தரமானதாகவும் அரசின் விதிகளின்படி முறையாக அமைக்கப்படுகிறதா என்றும் தார், ஜல்லி கலவையின் விகிதம், தன்மை, வெப்பம், அடர்த்தி போன்றவை சரியாக உள்ளதா என்றும் பழைய சாலைகள் மில்லிங் செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். பணியில் இருந்த மாநகராட்சி அலுவலர்களிடமும் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடமும் கேட்டறிந்தார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரமணா நகர் இளங்கோ தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வட்டார துணை ஆணையர் அப்துல் ரகுமான், தலைமை பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் நேருகுமார், திருவிக. நகர் மண்டல செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: