தொழில் போட்டியால் தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் பாஜ பிரமுகர்கள் 3 பேர் கைது

காரமடை: காரமடை- தோலம்பாளையம் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் சரவணகுமார் (40), கீதா (34) தம்பதி. இவர்கள் அப்பகுதியில் விலை குறைவாகவும், அதே நேரத்தில் தரத்துடனும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அருகிலேயே தோலம்பாளையம் சாலையில் ஓட்டல் நடத்தி வரும் வெள்ளியங்காடு பிரபு (34), நேற்று மதுபோதையில், தொழிலாளர்கள் ஞானசேகர் (54), விஜயகுமார் (52) ஆகியோருடன் கீதா - சரவணகுமார் தம்பதி நடத்தும் ஓட்டலுக்கு சென்று, எங்களை விட விலை குறைவாக ஏன் விற்கிறீர்கள் என கேட்டு தாக்கியுள்ளனர்.

மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த தம்பதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  அவர்களது புகாரின்படி காரமடை போலீசார் வழக்குப்பதிந்து பிரபு, ஞானசேகர், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான மூவரும் பாஜக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: