தீண்டாமை வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை ஜாமீனுக்கு முன் பரிசீலிக்க வேண்டும்: 2 ஆண்டுக்கு முன் வழங்கிய ஜாமீன் ரத்து

மதுரை: தீண்டாமை வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வழங்கும் முன் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் உள்ள நிலத்தின் மீதான உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது. கடந்த 24.2.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியில் ஒரு தரப்பினர் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபாலகிருஷ்ணன் தரப்பினர் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இதை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்து அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தையும் முறையாக பரிசீலித்திருந்தால், தற்போது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டிருக்காது. சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் ஜாமீன் உத்தரவு நிலைக்கத்தக்கதா? குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, குற்றம் சாட்டப்பட்டோரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஜாமீனுக்கு பிந்தைய சூழல் உள்ளிட்டவற்றையும் பார்க்க வேண்டியுள்ளது.

பல கோணங்களிலும் ஆராய்ந்த பிறகே ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணை நீதிமன்றமோ, ஆட்சேபத்தையும் பதிவு செய்து இயந்திரத்தனமாக ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துள்ளது. எஸ்சி / எஸ்டி மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், அவமரியாதை மற்றும் அவமானத்தை தடுத்திடும் வகையில் தான் எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் ஜாமீன் கோரும்போது, உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை.

இந்த வழக்கின் ஒரு மனுதாரர், ஜாமீன் பெற்றவர்கள் தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். முதலில் பிரச்னை நடந்த 2 ஆண்டுக்கு பிறகு பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தளவுக்கு வெறுப்பும், விரோதமும் இருந்துள்ளது. எனவே, எஸ்சி - எஸ்டி வன்கொடுமை வழக்கில் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு மதுரை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு மீண்டும் அதே நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் தரப்பு ஆட்சேபத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் 2 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

Related Stories: