மாதம் 15% வட்டி தருவதாக ரூ.4,400 கோடி வசூலித்து மோசடி ஹிஜாவ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு

சென்னை: மாதம் 15% வட்டி தருவதாக ரூ.4,400 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஹிஜாவ் நிறுவன உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் புகார்களை பொருளாதார குற்றப்பிரிவில் அளிக்கலாம் என அறிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டித் தொகை அளிப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளனர். சுமார் 89,000 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.4,400 கோடி வரை வசூல் செய்ததும், அவர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்கள் 19, மேலாண்மை இயக்குநர், தலைவர் ஏஜென்ட்கள், அலுவலக பணியாளர்கள் என 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஹிஜாவ் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜன், இயக்குநர்கள் நேரு, செல்வம், சுரேஷ், சந்திரசேகரன், பிரிஸிட்லா கமிட்டி உறுப்பினர்களான குருமணிகண்டன், முகமது செரிப், சாந்தி பாலமுருகன், கல்யாணி, பாரதி ரவிசந்திரன், சுஜாதா உள்பட 13 பேர்  கைது செய்யப்பட்டனர். தற்போது மற்றொரு இயக்குநர் கலைச்செல்வி, ஹிஜாவ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும், மேலாண் இயக்குநருக்கு நெருக்கமானவருமான ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரவிச்சந்திரன் கடந்த 2019ம் ஆண்டே ஹிஜாவ் நிறுவனத்தில் இணைந்து அதை மல்டிலெவல் மார்க்கெட்டிங் ஆக மாற்றி அதன் மூலம் அதிக முதலீடுகளை திரட்ட மேலாண்மை இயக்குநர் அலெக்சாண்டர், தலைவர் சவுந்தரராசன் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இவர் தனது பெயரில் ஆர்எம்கே பிரதர்ஸ் என்ற பெயரில் துணை நிறுவனம், சென்னை, அண்ணாநகர் மேற்கில் ஆரம்பித்து ரூ.300 கோடி வரை முதலீடுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்று ஹிஜாவ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் ரூ.1 கோடி வரை கிடைத்த கமிஷன் தொகை மூலம் ரவிச்சந்திரன் 2 சொகுசு கார்கள், ரூ.5 கோடி மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நிலம் ரூ.2 கோடி மதிப்பில் தேவகோட்டையில் நிலம் மற்றும் காரைக்குடியில் வீடு கட்டியுள்ளார். அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

இவரது மனைவியும், ஹஜாவ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கைது செய்யப்பட்ட கலைச்செல்வி தனது கணவருக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மேலாண்மை இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவியும் முன்னாள் இயக்குநருமான மகாலட்சுமி, துணை நிறுவனங்களின் உரிமையாளர்கள் முக்கிய ஏஜென்ட்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வழக்கில் இதுவரை சுமார் 13 ஆயிரம் புகார் மனுக்கள் மட்டும் வரப்பெற்றுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விரைவில் தங்கள் புகார்களை சென்னை, பொருளாதார குற்றப்பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: