பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்ததாக தமிழக அரசால் பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகளில் இருப்பவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும்.

விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இப்போதைய பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். விசாரணைக்குழு புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல், ஏப்ரல் 12ம் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Related Stories: