கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்த போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.ரயில் மூலம் கஞ்சா கடத்துவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 2020 பிப்ரவரியில் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2020 பிப்ரவரி 10ம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கையில் 2 பைகளுடன் நின்று கொண்டிருந்த உசிலம்பட்டியை சேர்ந்த குருநாதன், விசாகப்பட்டினத்தை சேர்ந்த குஞ்சலோவராஜு ஆகியோரிடம் சோதனை நடத்தியதில் குருநாதன் வைத்திருந்த பைகளில் 24 கிலோ கஞ்சாவும், குஞ்சலோவராஜு வைத்திருந்த பைகளில் 22 கிலோ கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குருநாதன் மற்றும் குஞ்சலோவராஜு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு ெசய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.டி.அம்பிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜராகி சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் குருநாதன் மற்றும் குஞ்சலோவராஜு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பில், போதை பொருள் கடத்தல் என்பது தேசத்திற்கு பெரிய சவாலையும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி எதிர்கால சந்ததியினரை அழித்துவருகிறது. பெரும்பாலான இளைஞர்களின் வாழ்வை பாதிக்கிறது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க உடனடி தேவை எழுந்துள்ளது.

போதை பொருள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏராளமானோர் போதை பொருட்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் நாடு முழுவதும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த செயலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள போதை பொருள் தடுப்பு சட்டத்தை உரிய முறையில் அமல்படுத்தி தவறு செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இதில் நீதித்துறைக்கு அதிக பொறுப்பு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: