ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளருடன் சேர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷை தமிழ்நாடு அழைத்து வர போலீசார் நடவடிக்கை

சென்னை: ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நடிகர் ஆர்.கே.சுரேஷை, இந்தியாவுக்கு அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே அந்த நிறுவன உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் அவருடன் சேர்த்து, சுரேஷையும் அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அமைந்தகரையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2438 கோடி வசூலித்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இயக்குநராக உள்ள ஹரீஸ் கைது செய்யப்பட்டார். இவர், பாஜகவில் விளையாட்டுப் பிரிவில் மாநில நிர்வாகியாக இருந்தார்.

இவர், கட்சியில் சேர்ந்த அன்றே அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்காக அவர் பல முறை அந்தப் பிரிவின் தலைவர் அமர்பிரசாத் ரெட்டியை சந்தித்து வந்தார். அவரை தனியாகவும் சந்தித்து வந்தார். அமர்பிரசாத் ரெட்டியை சந்திக்கும்போது காரில் ஆட்களுடன் செல்லும் ஹரீஸ், அவரது வீட்டின் தெரு முனை வந்ததும், அனைவரையும் நிற்கச் சொல்லிவிட்டு, ஹரீஸ் மட்டும் அமர்பிரசாத் ரெட்டியை சந்தித்து வந்தார். இதனால், தனது பதவிக்காக பெரிய அளவில் பணத்தை அவரிடம் கொடுத்து வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமர்பிரசாத் ரெட்டிதான், அண்ணாமலையிடம் ஹரீசை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனால் இந்த முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஹரீசை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் இயக்குநராக இருந்த ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ரூ.20 கோடியை, நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் ெகாடுத்து தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க செய்யும்படி கேட்டுக் கொண்டார். பணத்தை வாங்கிய சுரேஷ், ரூ.7 கோடி பணத்தை ஒரு சினிமா பிரமுகரிடம் கொடுத்து விட்டு மீதம் உள்ள ரூ.13 கோடியை வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரூசோ கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், தான் மாட்டிக் கொள்வோம் என்று பயந்த ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பல முறை அழைத்தும் விசாரணைக்கு வரவில்லை. ஏற்கனவே ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் துபாயில் உள்ளனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வர, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சர்வதேச போலீஸ் மூலம் அவர்கள் இருவரையும் கைது செய்ய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், சுரேஷையும் சென்னைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் ஆர்.கே.சுரேஷ், இந்தப் பணத்தைக் கொண்டு சினிமா தயாரித்து வந்ததாகவும், அரசியலுக்காக செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்து விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: