தமிழ்நாட்டில் 5 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5  இடங்களில், நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதனால் சராசரியாக வெப்ப நிலையில்  4 டிகிரி செல்சியஸ் வரை கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  ஈரோடு, கரூர் பகுதிகளில்  101 டிகிரி  வெயில் நிலவியது. மதுரை,  திருச்சி, நாமக்கல் பகுதிகளில் 100 டிகிரி வெயில்  என 3 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. கன்னியாகுமரி,  ராமநாதபுரம், கரூர், திருப்பத்தூர், வேலூர்  மாவட்டங்களில் இயல்பைவிட 1.6  டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி  செல்சியஸ்வரை வெப்பம் அதிகரித்து  காணப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 1.5  டிகிரி செல்சியஸ் வரை குறைவாக  காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று 5 நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. அதன்படி ஈரோடு 103.28 டிகிரி, கரூர் பரமத்தி 103.1 டிகிரி, மதுரை விமான நிலையம் 102.2 டிகிரி, திருச்சி 101.66 டிகிரி, மதுரை நகரத்தில் 100.04 டிகிரி வெயில் நிலவியது. அதன்படி 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டு வெயில் சுட்டெரித்தது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: