காவிரி-குண்டாறு இணைப்பு நடைபெற்றே தீரும்: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில், அதிமுக எம்எல்ஏ டாக்டர் சி.விஜயபாஸ்கர், காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். இதே போல மா.சின்னதுரையும் பேசினார். இதற்கு பதில் அளித்து நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நீண்ட நாட்களுக்குப் பிறகு, விஜயபாஸ்கரின் வேகமான பேச்சைக் கேட்டேன். அவர் அமைச்சராக இருக்கிறபோது, நிச்சயம் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டிருப்பார். ஆனால், மிகவும் கெட்டிக்காரத்தனமாகப் பேசுவார். மகாநதியையும், குண்டாற்றையும் இணைப்பது என்பது கடினம், வேண்டாம் என்று இரண்டாக்கி விடுவோம் என்று மகாநதியையும், கோதாவரியையும் இணைப்பது என்றும், கோதாவரியிலிருந்து குண்டாறு வரை இணைப்பதுபோல் வைத்தார்கள். அதையும் இணைக்கலாம் என்று சொன்னார்கள்.

அந்தத் திட்டம் வந்தபொழுதே, இது ஒரு நல்ல திட்டம், வரும்போது வரட்டும். ஆனால், காவிரியையும், குண்டாற்றையும் இணைப்பது, நாம் அந்த வேலையைச் செய்யலாமென்று கலைஞர் தான் முதன்முதலாக அதை நினைத்து அதற்காக ஒரு கதவணையைக் கட்ட வேண்டும். மாயனூரில் ‘பெட் ரெகுலேட்டர்’ இருந்தது. முதன் முதலாக அந்த கதவணையை ரூ.165 கோடி கொடுத்து, கட்டி, அங்கிருந்து குண்டாற்றிற்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்கான வேலைகளைச் செய்தவர் கலைஞர்; கட்டியவன் அடியேன் துரைமுருகன். 9-5-2008-ல் கலைஞர் ஆணையிட்டார். 9-2-2009ல் வேலையை துவக்கினோம். அதற்கு பிறகு நீங்கள் வந்தீர்கள். இவையெல்லாம் வேண்டாம். காவிரி-குண்டாறு இணைக்க வேண்டும் என்றால், முதலில் கால்வாய் வெட்ட வேண்டும். கால்வாய் வெட்ட வேண்டும் என்றால், நிலத்தை எடுக்க வேண்டும்.

நிலம் எடுப்பதற்கு, முதலில் பணம் வேண்டும். 2020ம் ஆண்டு உங்கள் ஆட்சியில் இத்திட்டத்திற்கு நில எடுப்பிற்காக ரூ.600 கோடி ஒதுக்கினீர்கள். அதில் ரூ.34.31 கோடி மட்டும் தான் செலவு செய்யப்பட்டது. மீதமுள்ள பணத்தை சர்க்கார், திரும்ப எடுத்து கொண்டது. அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்திற்காக, 71.60 ஏக்கர் நிலங்கள் தான் கையகப்படுத்தப்பட்டன. 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டுகளில் ரூ.312 கோடியை இத்திட்டத்திற்காக நாங்கள் ஒதுக்கினோம். இதற்காக, 698.97 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நம்முடைய முதல்வர், மீதமுள்ள இந்தப் பணத்தை நீங்களே டெபாசிட் செய்து வைத்து, பணம் எப்பொழுது எல்லாம் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

ஆக, நில எடுப்புக்கான பணத்தை டெபாசிட் செய்து ரெடியாக வைத்திருப்பது மு.க.ஸ்டாலினின் ஆட்சி. 2023-2024 ஆம் ஆண்டில் நில எடுப்புப் பணிக்காக, ரூ.554.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. நிலங்களை ஆர்ஜிதம் செய்து விட்டோம். இது நில எடுப்பு. அடுத்து என்ன செய்வது, நில எடுப்புக்குப் பிறகு கால்வாய் வெட்ட வேண்டும். 2021-2021ம் ஆண்டில் நீங்கள் ஒன்றும் செலவு செய்யவில்லை. 2022-2023ம் ஆண்டில் ரூ.177.9 கோடி நாங்கள் கால்வாய் வெட்டும் பணிக்காக செலவு செய்திருக்கிறோம். 64 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. 2023-2024ம் ஆண்டுகளில் கால்வாய் வெட்டும் பணிக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கால்வாய் வெட்டும் பணிகள் வேகமாக நடந்துக்கொண்டிருக்கின்றன. எனவே, உறுப்பினர் விஜயபாஸ்கருக்கு சொல்லிக்கொள்கிறேன், நிச்சயமாக மு.க.ஸ்டாலின் ஆட்சியில், காவிரி-குண்டாறு இணைப்பு நடைபெற்றே தீரும்.

Related Stories: