சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் 5 முதல் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. சென்னைக்கு அருகே உள்ள பரனூர், போரூர், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறைபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சுங்கக் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றக் கோரியும், மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு, வானகரம் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது, சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே டீசல் விலை உயர்வு போன்றவற்றால் லாரி மற்றும் வாகனங்களை வைத்து நடத்தப்பட்டு வரும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொழில்கள் மேலும் நலிவடையும் நிலை ஏற்படுவதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும். ’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: