ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் (திமுக) பேசுகையில், ‘‘சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலையாக புழல் ஏரியும், சோழவரம் ஏரியும் உள்ளன. ஆனால், என்னுடைய தொகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தில் 32 ஊராட்சிகளும், 1 பேரூராட்சியும் உள்ளன. புழல் ஏரியில் 3.2 டிஎம்சி குடிநீரும், சோழவரம் ஏரியில் சுமார் 1 டிஎம்சி குடிநீரும் தேக்கி வைக்கக்கூடிய கொள்ளளவு உள்ளது. 2 வருடங்களாக எல்லா நீர்த்தேக்கங்களுமே நிரம்பி வழிந்து வருகின்றன. இருந்தாலும், புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரியின் அருகில் வசிக்கின்ற ஊராட்சிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. குடிநீர் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற குறை இருக்கிறது. நீர்த் தேக்கங்களில் உள்ள அந்த குடிநீரை அந்த பகுதியில் வசிக்கின்ற மக்கள் கூட பயன்படுத்த முடியவில்லை. எனவே, கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கித்தர வேண்டும்,’’ என்றார்.

`அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் கூட்டுக்குடிநீர் திட்டம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார். நிச்சயம் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக, எந்தெந்த கிராமங்களில் அந்த தண்ணீர் கொடுக்க முடியும் என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ற ஒரு திட்டத்தை வகுத்து வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். மாதவரம் எஸ்.சுதர்சனம்: சென்னையைச் சுற்றியுள்ள புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் தேர்வாய் கிராமத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் மொத்தமாக 13 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்ல, கிருஷ்ணா நதி நீர் மூலமாக ஆண்டுக்கு சராசரியாக 8 டிஎம்சி கிடைக்கிறது. அதேபோன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக ஏறக்குறைய 2 டிஎம்சி கிடைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக தேர்வாயில் தேக்கி வைக்கப்பட்டிருக்கிற 0.5 டிஎம்சி தண்ணீரை இதுவரை குடிநீர் வாரியம் பயன்படுத்தவே இல்லை. அதை பக்கத்தில் இருக்கிற கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்கித்தர வேண்டும். அமைச்சர் ஐ.பெரியசாமி: எந்த நீராதாரத்தைக் கொண்டு எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்பதை உறுப்பினர் தெரிவித்தார் என்றால், அதற்காக திட்டம் தீட்டப்பட்டு, நிச்சயம் வழங்குவதற்குரிய முயற்சிகள் எடுக்கப்படும்.  இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: