நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் ரோபோட்: புதுவை மாணவர் அசத்தல்

புதுச்சேரி: உலகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சறுத்தி வருகிறது. தற்போது கூட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. முதல் டோஸ், 2வது டோஸ், பூஸ்டர் டோஸ் என தடுப்பூசி பட்டியல் நீண்டாலும், அதற்கேற்ப கொரோனா வைரசும் பல நிலைகளில் உருமாறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வேகமாக பரவும் தொற்றாக இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் இன்றளவும் உலக நாடுகள் தவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உதவியாக இருந்து நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடிய புதிய ரோபோட்டை புதுச்சேரியை சேர்ந்த மாணவர் ஸ்ரீனிவாஸ் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி சாரதாம்மாள் நகரில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஸ்ரீனிவாஸ். இவர் கணினி அறிவியல் விரிவுரையாளர் ராஜேந்திரன் வழிகாட்டுதலோடு நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவருக்கு தகவல் அனுப்பும் ரோபோட்டை உருவாக்கினார். இந்த ரோபோட்டை கடந்தாண்டு நவ.28ம் தேதி முதல் 30ம் தேதி வரை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மண்டல அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தார். அதில் ஸ்ரீ   னிவாஸ் உருவாக்கிய ரோபோட்டுக்கு மேல்நிலை பிரிவில் முதல் பரிசு கிடைத்தது. இதன் மூலம் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தேர்வானார். தொடர்ந்து, டிச.1, 2 ஆகிய தேதிகளில் மாநில அறிவியல் கண்காட்சி நடந்தது. இதிலும் இவரது படைப்பு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உட்பட நடுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனால் மாநில அளவிலான போட்டியில் 2ம் பரிசு பெற்றார். அவருக்கு முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இதுகுறித்து மாணவர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘கொரோனா பெருந்தொற்றின் போது லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள். அப்போது, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ முன்களப் பணியாளர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு தங்களின் இன்னுயிரை நீத்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து மருத்துவ பணியாளர்களை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அதன் விளைவாகவே, நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கக்கூடிய ரோபோட்டை உருவாக்கினேன். இந்த ரோபோட் அர்டினோ போர்டுடன் இணைந்து காய்ச்சல், நாடித்துடிப்பு, இசிஜி, ஆக்சிஜன் அளவு குறித்த அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செவிலியர்கள் இல்லாமல் தானியங்கியாக செயல்படும் வகையில் உருவாக்கி உள்ளேன்.

இந்த ரோபோட் செயல்பாட்டிற்காக ஒரு மனித உருவ ரோபோட்டுடன் அர்டினோ போர்டை இணைத்துள்ளேன். இந்த அர்டினோ போர்டில், உடல் வெப்பத்தை அறியக்கூடிய சென்சார், நாடித்துடிப்பனை அறியக்கூடிய சென்சார், ஈசிஜி அறியக்கூடிய சென்சார் மற்றும் ஆக்ஸிஜன் அளவினை கண்டறியும் சென்சார்களை இணைத்துள்ளார். இந்த சென்சார்கள் வெளியிடும் தகவல்களை நோயாளிகளும் நேரடியாக பார்க்கும் வகையில் கணினி திரையில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சென்சார் வெளியிடும் தகவல்கள் ரோபோட்டில் உள்ள சிறு கணினி (ராஷ்பெர்ரி பை) மூலம் தொலைவில் உள்ள செவிலியர் மற்றும் மருத்துவருக்கு கணினி திரைக்கு ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பி வைக்கும். முதற்கட்டமாக செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் இந்த ரோபோட்டை சிறியதாக உருவாக்கியுள்ளேன்.

இதை மனிதர்களைப்போல் பெரிய அளவில் உருவாக்கும்போது, அனைத்து வசதிகளையும் கொண்டதாக வடிவமைக்க முடியும். இது 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை உடனுக்குடன் மருத்துவருக்கு அனுப்புவதன் மூலம் ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்படும்போது, உடனே மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும், நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படும்போது, மருத்துவர்கள் டெலி மெடிசன் மூலம் ரோபோட்டை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

என்னுடைய அறிவியல் படைப்பு உருவாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, வகுப்பு ஆசிரியர் இளவழகன், கணினி அறிவியல் விரிவுரையாளர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய அறிவியல் படைப்பான இந்த ரோபோட்டை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். தற்போது காய்ச்சல், நாடித்துடிப்பு, இசிஜி, ஆக்சிஜன் அளவு குறித்த அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் செய்து, அத்தகவல்களை மருத்துவருக்கு அனுப்பும் வகையில்தான் உள்ளது. மேற்கொண்டு எலும்பு பகுதியில் ஏதேனும் அடிப்பட்டால் அதனை எக்ஸ்-ரே எடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஸ்கேன்களை செய்து மருத்துவருக்கு தகவலை அனுப்பும் வகையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன்’ என்று கூறினார். 

Related Stories: