24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களில் 67 கோடி பேரின் தகவல்களை திருடிய பலே ஆசாமி கைது: தெலங்கானா போலீசார் அதிரடி

ஐதராபாத்: நாடு முழுவதும் 24 மாநிலங்களில் மொத்தம் 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த 66 கோடியே 90 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்த நபரை தெலங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் பெயர் விநாயக் பகத்வாஜ். இவர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்துள்ளோர், 9,10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், மூத்த குடிமக்கள், டெல்லி மின்வாரியத்துறை வாடிக்கையாளர்கள், டி-மார்ட் கணக்கு வைத்துள்ளோர், தனி நபர்களின் செல்போன் எண்கள், நீட் மாணவர்கள், பெரும் பணக்காரர்கள், இன்சூரன்ஸ் கணக்கு வைத்துள்ளோர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கணக்கு வைத்துள்ளோரின் தனிப்பட்ட தகவல்களை விநாயக் பகத்வாஜ் திருடியுள்ளார்.  

அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் இருந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பயர்வெப்ஸ்  என்ற இணையதளம் மூலம் விநாயக் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடி அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.  இதையடுத்து விநாயக் பகத்வாஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 லேப்டாப்கள், தனிப்பட்ட தரவுகள் அடங்கிய கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: