இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக 21 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக 21  புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும், இந்த அறிவிப்புகளை வெளியிட அனுமதி தந்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

* மாண்புமிகு முதலமைச்சரின் பொன்னான திட்டங்களில் ஒன்றான ”உங்கள் தொகுதியில்   முதலமைச்சர்”    திட்டத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.1093கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்

* மாண்புமிகு முதலமைச்சரின் பொன்னான திட்டங்களில் ஒன்றான ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஒரு புறவழிச்சாலை அமைத்தல், 23 சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், 5 ஆற்றுப்பாலங்கள், 14 சிறுபாலங்கள் கட்டுதல், மற்றும் 9 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.1093கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

*தொலைதூர சாலைப் பயனாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சுகமான பயண அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் ”சாலையோர வசதி மையங்கள்” பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் (PPP) அமைக்கப்படும்

* தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயனாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் புத்துணர்வுடன் பயணத்தைத் தொடர்வற்கு வசதியாக அதிக வாகனப் போக்குவரத்து உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் ”சாலையோர வசதி மையங்கள்”  3 இடங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.

*  சாலையோர வசதி மையங்களில், பேருந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் சீருந்துகளுக்கான தனித்தனியே வாகன நிறுத்தும் இடங்கள், ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், முதலுதவி மையம், உணவகம், எரிபொருள் நிலையம், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM), கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா, குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கம், வாகனம் பழுது பார்க்கும் வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

* இத்தகைய “சாலையோர வசதி மையங்கள்” தனியார் பங்களிப்பு மூலம் (PPP Model) உருவாக்கப்படும்.

3. ஆறுவழிச்சாலைகள்/ அதிவேக விரைவுச் சாலைகள் (Express Way) உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) போன்ற   பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

* சாலை உட்கட்டமைப்பு போன்ற பெரிய பணிகளை செயல்படுத்துவதில் கால தாமதங்களை தவிர்த்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் செயல்படுத்த, துரிதமாக முடிவுகள் உடனுக்குடன் எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) போன்று முடிவுகளை கால தாமதமின்றி எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

* இந்த அமைப்பானது, பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) போன்ற பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தும்.

* இதற்கு தேவைப்படும் சட்ட முன்வரைவுகள்  தயாரிக்கப்படும்.

4.  விபத்தில்லா மாநிலம் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் கனவை செயல்படுத்த பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய வேண்டி உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக, பொது மக்களின் துணையோடு கண்டறியப்பட்ட சாலை பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்யப்படும். இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்

* சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தடையற்ற போக்குவரத்திற்கு பள்ளங்களற்ற சாலைகளை மக்களுக்கு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனுக்குடன் கண்டறிவதில் பொது மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. பள்ளங்கள் உள்ள சாலை பகுதிகளை தங்கள் கைப்பேசி முலம் புகைப்படம் எடுத்து செயலியில் (Mobile App) பதிவேற்றம் செய்யும் வகையில்  கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்.

* சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும். மேலும், சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

* இவ்வாறாக பள்ளங்களற்ற சாலைகள் என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறை முன்னேறி செல்லும்.

5. நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்? களுக்கு நெருக்கமான பயனர் குழு (CUG) முறையில் நிரந்தர அலைபேசி எண் வழங்கப்பட்டு அந்த  எண் வாயிலாக எந்தவொரு அலுவலரையும் எளிதில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்படும்

* நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள 9 கண்காணிப்புப் பொறியாளர்கள், 55 கோட்டப் பொறியாளர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் 197 உதவிக் கோட்டப் பொறியாளர்கள் மற்றும் 296 எண்ணிக்கையிலான உதவிப் பொறியாளர்களால் 66,382 கி.மீ. நீளமுள்ள பல்வேறு வகையான அரசு சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

* இச்சாலைகள் தொடர்பான அனைத்து விதமான பராமரிப்பு நடவடிக்கைகள், சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ஏற்படும் பழுதுகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை தொடர்பு கொள்வதற்கு நிரந்தரமான தொலைபேசி எண் தேவைப்படுகிறது. எனவே நிரந்தரமான தொலைபேசி எண் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு பொறியாளர்களுக்கு வழங்கப்படும்.

* இதன் மூலம், நிரந்தர அலைபேசி எண் வாயிலாக எந்தவொரு அலுவலரையும் எளிதில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்படும்.

6. நெடுஞ்சாலைத்துறையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஆய்வு விவரங்களைக் கணினி மயமாக்குதல் மூலம் எளிதாக கண்காணிக்கப்படும்.

* நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு அலகுகளின் மூலம் புதிய புறவழிச் சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், போக்குவரத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்துதல், சாலைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பணிகளின் வெவ்வேறு நிலைகளை கண்காணிக்கவும் முன்னேற்றத்தை உறுதி மற்றும் ஆய்வு செய்யவும் “திட்டப் பணிகள் கண்காணிப்பு மற்றும் தகவல் அமைப்பு” (Project Monitoring Information System (PMIS)) என்ற மென்பொருள் (Software) மற்றும் கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்.

* இதனால் திட்டங்களின் செயல்பாடு எளிதாகவும்  வெளிப்படை தன்மையோடும் கண்காணிக்கப்படும்

7. தரமான   சாலைகளை  அமைக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு சாலையின் மேடு பள்ளங்கள் இணைய ஆய்வு வாகனம் (Net Survey Vehicle) கொண்டு கண்டறியப்படும்.  இவ்வாறான தரப்பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே, பணி நிறைவுச் சான்றிதழ் அளிக்கப்படும்.

* புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் மேடு பள்ளங்கள் தற்பொழுது கேம்பர் போர்டு போன்ற சாதனங்களை கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.

* இணைய ஆய்வு வாகனம் (Net Survey Vehicle) கொண்டு ஒருங்கிணைப்பு சோதனை (Bump Integrator Test) மூலம் சாலையின் சீரற்ற தன்மை (Roughness index indicating Uneveness) கண்டறியப்படும்.

* மேலும் பாலங்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படா வண்ணம் (Non Destructive Testing) ஆய்வுகள் செய்து, சிமெண்ட் கலவையின் தரம் மற்றும் வலிமை உறுதி செய்யப்படும்.

* முடிக்கப்பட்ட பாலம் மற்றும் சாலைப் பணிகளின் தரத்தை மேற்கண்ட ஆய்வுகள் மூலம் உறுதி செய்த பின்னரே பணி நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) வழங்கப்படும்.

* இதனால் தரமான சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படுவது  உறுதி  செய்யப்படும்.

8. மாநில நெடுஞ்சாலைகளின் நில எல்லை அளவு மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் (Assets) விவரங்கள் கணினிமயமாக்கப்படும் (Digitalization)

* நெடுஞ்சாலைத்துறையின் சாலை பணிகளை   விரைந்து   முடிக்கவும் இனிவரும் காலங்களில் தாமதத்தை தவிர்க்கவும் நில எடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் உரிய காலக் கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும். இதனை    கருத்தில் கொண்டு முதற்கட்டமாக, நெடுஞ்சாலைத்துறையின் 12,291கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு (Right of Way Details) மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் (Assets) விவரங்கள் கணினிமயமாக்கப்படும் (Digitalization).

9. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

* பசுமையான சாலைகள் மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குவது இத்துறையின் குறிக்கோளாகும்.  

* முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த ஆண்டு அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும்.

* மேலும் சாலை ஓரங்களில் உள்ள உயரமான பகுதிகளில் மண் அரிப்பை தவிர்க்கும் பொருட்டு பனை விதைகள் ஊன்றப்படும்.

10. முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ் நடப்பாண்டில், 13.30கி.மீ.      நீள    ஈரோடு வெளிவட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட 200கி.மீ சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 600கி.மீ.   சாலைகள்    இரு வழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

* 2021 - 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள், அடுத்த 10 ஆண்டுகளில் 2200கி.மீ. சாலைகளை நான்கு வழித்தடச் சாலைகளாகவும் மற்றும் 6700கி.மீ. சாலைகளை இரண்டு வழித்தடச்சாலைகளாகவும் அகலப்படுத்தப்படும்.

* இத்திட்டத்தில் நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில், 13.30கி.மீ. நீள ஈரோடு வெளிவட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட 200கி.மீ சாலைகளை நான்கு வழித்தடச் சாலைகளாகவும் 600கி.மீ. சாலைகளை இரு வழித்தடச்சாலைகளாகவும் அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு தங்கு தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்து உறுதிப்படுத்தப்படும்.

11. ஆற்றுப் பாலங்கள்

* 9 மாவட்டங்களில் 13 ஆற்றுப் பாலங்கள் ரூ.215.80கோடி மதிப்பில் கட்டப்படும்.

* 3 மாவட்டங்களில் 3 ஆற்றுப் பாலங்கள் அமைக்க ரூ.29.65கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆற்றுப் பாலங்கள் கட்ட ரூ.50இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் நெரும்பூர் அருகில் பாலாற்றின் குறுக்கே,

* இராணிபேட்டை மாவட்டத்தில் நெமிலி அருகில் கல்லாற்றின் குறுக்கே,

* கடலூர் மாவட்டத்தில் ஶ்ரீமுஷ்ணம் அருகில் வெள்ளாற்றின் குறுக்கே,

* திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகில் கமண்டல நாகநதி குறுக்கே மற்றும் வடஇலுப்பை அருகில் பாலாற்றின் குறுக்கே,

* கோயம்புத்தூர் மாவட்டத்தில், பூரண்டம்பாளையம் ஓடை குறுக்கே, மற்றும் செஞ்சேரிமலை அருகில் ஆழியாற்றின் குறுக்கே,

* பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர் அருகில் சின்னாற்றின் குறுக்கே,

* தஞ்சாவூர் மாவட்டத்தில் பூக்கொல்லை அருகில் பூனைக்குத்தி ஆற்றின் குறுக்கே மற்றும் பெரியகோட்டை அருகில் கண்ணணாற்றின் குறுக்கே

* இராமநாதபுரம் மாவட்டத்தில் வன்னிவயல் அருகே வைகை ஆற்றின் குறுக்கே

* நாமக்கல் மாவட்டத்தில் இலுப்பை அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்கே

* ஆகிய 9 மாவட்டங்களில் 13 இடங்களில் ரூ.215.80கோடி மதிப்பில் ஆற்றுப்பாலங்கள் அமைக்கப்படும்.

* நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகில் காவேரி ஆற்றின் குறுக்கே, திருச்சி மாவட்டம் இடையாத்துமங்கலம் அருகில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே ஆகிய 3 இடங்களில் ஆற்றுப் பாலங்கள் அமைக்க ரூ.29.65கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெய்யாடிவாக்கம் - இளையனார்வேலூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே மற்றும் வாலாஜாபாத் - அவலூர் சாலையில் பாலாற்றின் குறுக்கே ஆகிய 2 ஆற்றுப் பாலங்கள் கட்ட முதற்கட்டமாக ரூ.50இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

12. புறவழிச்சாலைகள்

* துறையூர், திருப்பத்தூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் ரூ.286கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* 2 நகரங்களுக்கு புறவழிச்சாலைகளும் மற்றும் 2 ஊர்களுக்கு திருத்திய நேர்ப்பாட்டில் சாலைகளும் அமைக்க ரூ.36கோடி மதிப்பில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* 8 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க முதற்கட்டமாக ரூ.1.50கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகருக்கும் (பகுதி-3), திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் நகருக்கும் (கட்டம்-1) மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகருக்கும் புறவழிச்சாலைகளும் மற்றும் நாமக்கலில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கு 200மீ நீளத்திற்கு இணைப்புச் சாலையும் ரூ.286கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி (கட்டம்-1) மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஆகிய 2 நகரங்களுக்கு புறவழிச்சாலைகளும், சிவகங்கை மாவட்டத்தில் புதுவயல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்கச்சிராப்பட்டு ஆகிய 2 ஊர்களுக்கு திருத்திய நேர்ப்பாட்டில் சாலைகளும் அமைக்க ரூ.36கோடி மதிப்பில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய 8 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க முதற்கட்டமாக ரூ.1.50கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

13. அனைத்து மாநில நெடுஞ்சாலைகளில்  சாலை பாதுகாப்பு தணிக்கை (Road Safety Audit)   செய்யப்பட்டு சாலை  விபத்துக்களை தடுக்க மிக முக்கிய உடனடி தேவைகள் கண்டறியப்பட்டு (Important and Immediate Measures) ரூ.150கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருளை விபத்து தடுப்பான்கள் (Roller Crash Barrier) ரூ.100கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

*சாலை விபத்துக்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கினை நோக்கி, சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறையில் கண்காணிப்புப் பொறியாளர் தலைமையில் 8 கோட்டப் பொறியாளர்களை கொண்ட சாலை பாதுகாப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது வரை சுமார் 400 பொறியாளர்களுக்கு ஒரு வாரகால விரிவான சாலை பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

* மேற்கண்ட சாலை பாதுகாப்பு அலகு மற்றும் பயிற்சி பெற்ற பொறியாளர்களைக் கொண்டு அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும், சாலை பாதுகாப்பு தணிக்கை (Road Safety Audit) செய்யப்படும்.

* இதன் அடிப்படையில்,   சாலை    விபத்துக்களை   தடுக்க மிக  முக்கிய உடனடி தேவைகள் கண்டறியப்பட்டு (Important and Immediate Measures) ரூ.150கோடி மதிப்பில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் மற்றும் மிகவும் ஆபத்தான  வளைவுகள் போன்ற பகுதிகளில் வெளிநாட்டு   தொழில்நுட்பத்தை      பயன்படுத்தி  ரூ.100கோடி மதிப்பில் உருளை விபத்து தடுப்பான் (Roller Crash Barrier) அமைத்து சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.

14. ”அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து” என்ற முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் 273 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக ரூ.787கோடி மதிப்பில் கட்டப்படும்

* காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை கையாளும் விதமாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ”அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டம்” (Chief Minister All Season Uninterrupted Connectivity Scheme) என்ற முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர் மட்ட பாலங்களாக 2026 ஆண்டிற்குள் கட்டப்படும் என 2021-2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

* நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ.300கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.

* நபார்டு வங்கி கடனுதவியுடன் 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ.487கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.

15. சுற்றுலாப் பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு

* மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்லும் சாலை ரூ22.80கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

* இராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல புறவழிச் சாலைகள் அமைக்க ரூ.88இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் .

* மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் பொது மக்கள் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க ஒரு புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வரங்கிற்குச் செல்ல 3.50கி.மீ. நீள சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி ரூ22.80கோடியில் மேற்கொள்ளப்படும்.

* இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடம் முதல் அக்னி தீர்த்தம் வரை புறவழிச்சாலை அமைக்க ரூ.38இலட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையிலிருந்து வள்ளிகுகைக்குச் செல்ல புறவழிச்சாலை அமைக்க ரூ.50இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

16. பெருநகர சென்னை மாநகரப்பகுதி மேம்பாடுகள்

* பல்லாவரம் மேம்பாலம் மற்றும் சென்னை புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்டச் சாலை அமைக்க ரூபாய் ஒரு கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* பெரிய தெற்கத்திய சாலையில் (GST) உள்ள பல்லாவரம் மேம்பாலத்தில்  (பான்ஸ் மேம்பாலம்) இருந்து சென்னை புறவழிச்சாலையை (Chennai Bypass Road) (தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை) இணைக்கும் வகையில் உயர்மட்டச் சாலை மேம்பாலம் அமைக்க ரூபாய் ஒரு கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

17. சென்னை மாநகரில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப (IT) வளர்ச்சிக்கு ஏற்ப இராஜிவ் காந்தி சாலை  (IT Expressway) போன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் ஆரச்சாலையை அடுத்த தொழில்நுட்ப விரைவு சாலையாக (IT Expresssway) மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* சென்னை மாநகரில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு செயப்பட்டு வருகின்றன. இராஜிவ் காந்தி சாலை (IT Expressway) போன்று சேவைச் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் பல்லாவரம் - துரைப்பாக்கம் ஆரச்சாலையை  அடுத்த தொழில்நுட்ப விரைவு சாலையாக (IT Expresssway) மேம்பாடு செய்யப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும்.

18. சென்னை பெருநகர பகுதியில் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது, மழைநீர் எங்கும் தேங்காதவண்ணம் சாதனைப் படைக்கப்பட்டது.  தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் கால்வாய் ஆகியவை ரூ.116கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

* கடந்த பருவமழையின் போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின், துரித நடவடிக்கைகளால், சென்னை பெருநகர பகுதியில் எங்கும் மழைநீர் தேங்காதவண்ணம் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு, சாதனைப் படைக்கப்பட்டது.  தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் கால்வாய் ஆகியவை ரூ.116கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பருவ மழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும்.  இவ்வாறாக மழைநீர் தேங்காதவண்ணம் பருவ மழையை எதிர்கொண்டு, சாதனைப் படைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

19. கரூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிடையே போக்குவரத்துக்கு ஏற்ப புதிய இணைப்பு உருவாக்க ரூ.25இலட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

* நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பாப்பாகோவில் கருங்கண்ணி சாலையை இணைக்கும் வகையில் ரூ.26கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படும்.

* கரூர் மாவட்டம், கரூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிடையே போக்குவரத்துக்கு ஏற்ப புதிய இணைப்பு உருவாக்க ரூ.25இலட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

* நாகப்பட்டினம்   அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பாப்பாகோவில் கருங்கண்ணி சாலையை இணைக்கும் வகையில் ரூ.26கோடி   மதிப்பில்   சாலை அமைக்கப்படும்.

20. இரயில்வே மேம்பாலங்கள்

* ஆறு மாவட்டங்களில் ரூ.238கோடி மதிப்பில் இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூரில் இரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.32கோடி மதிப்பில் நில எடுப்புப்பணி மேற்கொள்ளப்படும்.

* தருமபுரி மாவட்டத்தில் டீச்சர்ஸ் காலணி,

* சேலம் மாவட்டத்தில் குஞ்சாண்டியூர்,

* திருப்பத்தூர் மாவட்டத்தில் பச்சூர்,

* விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி,

* வேலூர் மாவட்டத்தில் சேவூர் மற்றும்

* திருவள்ளூர் மாவட்டத்தில்  திருவாலங்காடு ஆகிய 6 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூரில் இரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.32கோடி மதிப்பில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

21.  தமிழ்நாடு கடல்சார் வாரியம்

இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை

1.     இராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ)

2.    இராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    

இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கும் நோக்கில்

1. இராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ)

2. இராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ)

ஆகிய வழித்தடங்களில் இயக்க இராமேஸ்வரம் சிறுதுறைமுக பகுதியில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் (Detailed Project Report and Estimates) தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: