இன்று முதல் முக கவசம் கட்டாயம் என அறிவிப்பு ஜி.ஹெச்சில் தயார் நிலையில் கொரோனா சிறப்பு வார்டுகள்

கேடிசி நகர் : கொரோனா பரவல் எதிரொலியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று முதல் ஜி.ஹெச்சுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த   2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து உருமாறி பல   அலைகளாக உலக நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருளாதார நசிவும் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி   மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில்  தற்போது இந்தியாவில் மீண்டும் உருமாறிய கொரோனா மெல்ல  தலை  தூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா   மாநிலங்களில் பாதிப்பு பதிவுகள் கூடியுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, சென்னை,   செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, தினமும்  பதிவாகத் தொடங்கியுள்ளது.இதையடுத்து  மாநிலம்  முழுவதும் சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.  தமிழ்நாட்டில் 342  கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 74 அரசு  மையங்களாக உள்ளன.

இந்த  மையங்களில் நாள்தோறும் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து  சந்தேகத்திற்கு உரிய  நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் மட்டும் தினமும் சராசரியாக 200   பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கு மேலும், தமிழகத்தில் 100 பேருக்கு மேலும் கொரோனா பாதிப்புகள் பதிவாகிறது.

கொரோனா வேகமாக பரவி வருவதால் முகக் கவசம் அணிவது, சமூக  இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு முறைகளை மீண்டும் தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 26ம் தேதி நெல்லையில் 7 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது தாக்கும் கொரோனா 3 நாட்களுக்கு பின்னர் வலுவிழந்து விடும் என்று கூறப்படுகிறது.

இதனால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும், எனவே பீதியடைய தேவையில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரவி வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு தயார் நிலையில் கொரோனா வார்டுகள் இருப்பதாகவும், இன்று முதல் ஜி.ஹெச்சிற்கு வரும் அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும் டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Related Stories: