திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு-எஸ்பி ஆய்வு

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க எஸ்பி.பாலகிருஷ்ணன் தலைமையில் கந்திலி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்டமாக 2019ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 28ம் தேதி திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவைகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாவட்ட எஸ்பி. அலுவலகம் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், திருவண்ணாமலை மெயின் ரோட்டில் சுமார் ₹30 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று இந்த பணிகள்  விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எஸ்பி பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானம் இடம் தேர்வு செய்யப்பட்டு வாணியம்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரி பின்புறம் இடம் பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க பல்வேறு பகுதிகளில் இடங்களை தேர்வு செய்யும் பணி எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து, நேற்று எஸ்பி பாலகிருஷ்ணன் கந்திலி அருகே உள்ள சின்னூர் கந்திலி மலை அடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கான இடத்தை தேர்வு செய்தார்.  தொடர்ந்து அருகே உள்ள கந்திலி மலைப்பகுதி, சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள திம்மம்பேட்டை மலை அடிவாரப் பகுதிகளில் ஆய்வு பணியானது மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர், திருப்பத்தூர் கந்திலி மலை அடிவாரப் பகுதி துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் என்று எஸ்பி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் கந்திலி மலை அடிவாரத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: