ஒன்றிய அரசு ₹6.89 கோடி மானியம் நாமக்கல்லில் ₹50 கோடியில் நவீன ஆவின் பால் பண்ணை

*ராஜேஸ்குமார் எம்பி., கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு

நாமக்கல் : நாமக்கல்லில் ₹50 கோடியில் நவீன ஆவின் பால் பண்ணை அமைக்க, ஒன்றிய அரசு ₹6.89 கோடி மானியம் ஒதுக்கியுள்ளது.இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வரின் அனுமதியுடன், பால்வளத்துறை அமைச்சர், நாமக்கல் மாவட்டத்தில், நவீன பால்பண்ணை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு (ஆவின்) சொந்தமான மோகனூர் சாலையில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில், நவீன பால் பண்ணை ₹50 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

நவீன பால் பண்ணை அமைக்க, கூடுதல் நிலமும் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இடத்தை பால் வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார். மொத்தம் 11 ஏக்கர் பரப்பில் பால் பண்ணை அமைகிறது. நாமக்கல்லில் அமைய உள்ள அதி நவீன பால்பண்ணை திட்டத்துக்கு, திட்டசெலவில் ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்திடம் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை  வைத்தேன். இதற்கான முன்மொழிவு ஆவின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி நாடாளுமன்றத்திலும் பேசினேன். முன்மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட்டு, கடந்த 23ம் தேதி ஒன்றிய அரசு, நாமக்கல்லில் அமைய உள்ள பால்பண்ணைக்கு முழு மானியமாக ₹6.89 கோடியை ஒதுக்கி உத்தரவு வெளியிட்டுள்ளது.

நாமக்கல்லில் அமையும் நவீன பால்பண்ணையில், தினமும் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தி பாக்கெட் செய்யப்படும். தயிர், வெண்ணைய், நெய் உள்ளிட்ட பால் உபபொருட்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்படும். நாமக்கல் மாவட்ட ஆவினுக்கு, தினமும் 1 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. நவீன பால்பண்ணை அமைவதன் மூலம், மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள். சேலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இப்போது தான், நவீன பால் பண்ணை அமைய உள்ளது. ஒன்றிய அரசின் மானியம் போக, மீதி உள்ள நிதியை தமிழக அரசும், ஆவினின் சொந்த நிதியையும் பயன்படுத்தி பால்பண்ணை அமைகிறது. கட்டுமான பணியை மேற்கொள்ள ஒப்பந்த புள்ளி மேற்கொள்ளப்படுகிறது.

பால் பண்ணைக்கான விரிவான திட்ட மதிப்பீடு அரசின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது, நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இது குறித்து, எம்எல்ஏ, அமைச்சர், நான் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு பணிக்கு சேலம் வந்த முதல்வரிடம், நேரில் கோரிக்கை வைத்தோம். நாமக்கல் புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை 3 கட்டமாக நடைபெறும். இதனை நிச்சயம் முதல்வர் நிறைவேற்றி தருவார். நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க நிலம் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலம் அரசின் புறம்போக்கு நிலம். பட்டா நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானதாக இருக்கிறது.

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சிப்காட் அமைக்கும் பணி நடைபெறும். அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு தொகை விவசாயிகள் ஏற்றுகொள்ளகூடிய வகையில் தான் இருக்கும். படித்த இளைஞர்கள் அதிகம் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி  தரவேண்டியுள்ளது. 500 ஹெக்டேருக்கு மேல் அரசுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. இதனால் சிப்காட் அமைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அனைவரின் விருப்பத்தின் அடிப்படையில் தான் சிப்காட் அமைக்கப்படும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி., கூறினார்.

தமிழக முதல்வருக்கு நன்றி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., கூறுகையில், ‘நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், செப்டம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலைப்பட்டி ரவுண்டாவில் இருந்து 0.8 கிமீ தூரத்துக்கும், புதிய பேருந்துநிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கும் இணைப்பு சாலை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். நாமக்கல் நகராட்சியை மாநாகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,’ என்றார்.

Related Stories: