9ம் தேதி பிரதமர் வருகை முதுமலை தெப்பக்காட்டில் பராமரிப்பு பணிகள் தீவிரம்-மசினகுடி பகுதியில் ஹெலிபேட் அமைக்க ஆலோசனை

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டுக்கு வருகிற 9ம் தேதி பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெறும் தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9ம் தேதி மைசூர் வருகிறார்.

அங்கிருந்து பந்திப்பூர் வரும் பிரதமர் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்று புகழ்பெற்ற பொம்மன்-பெள்ளி பாகன் தம்பதியை நேரில் பார்த்து பாராட்டு தெரிவிக்கவும், யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து பார்வையிடவும் முதுமலைக்கு வருகிறார். அதேபோல அவர் கேரள மாநிலம் வயநாடும் செல்கிறார். இந்த தகவலை ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு மசினகுடி மாநில நெடுஞ்சாலைசாலையில் மாயாற்றின் மீது போடப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான பாலம் இடிக்கப்பட்ட நிலையில் வனத்துறைக்கு சொந்தமான  தற்காலிக சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மாயாற்றின் குறுக்கே தரை பாலம் உள்ளது. தெப்பக்காடு மைசூர் சாலை சந்திப்பில் இருந்து தரைப்பாலம் வரையிலான சுமார் அரை கிலோ மீட்டர் தூர சாலை தார் சாலையாக அமைக்கப்பட்டது.ஆனால் தரைப்பாலத்தின் மறுபகுதியில் இருந்து மசினகுடி சாலை சந்திப்பு வரையிலான சுமார் 300 மீட்டர் தூர சாலை மண் சாலையாகவே பராமரிப்பின்றி இதுவரை காணப்பட்டது.

இந்த சாலை வழியாகவே பேருந்துகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை கடந்த ஒரு வருடமாக பயணித்து வருகின்றன. இந்த சாலை தற்போது தார் சாலையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் மசினகுடி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகம் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. மேலும் யானைகள் முகாம் பகுதியில் நடந்து செல்வதற்கு வசதியாக கற்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி தெப்பக்காட்டிற்கு வர வாய்ப்பு இருப்பதால் மசினகுடி பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேட் அமைக்கும் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 இது தொடர்பாக வருவாய்த்துறையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் நேற்று சிங்கார சாலையை ஒட்டிய பகுதியில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர். முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சுப்ரியா சாகுவின் உத்தரவுப்படி இப்பணிகள் நடைபெறுவதாக வனத்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories: