கிளன்வன்ஸ் பகுதியில் கொம்பன் யானை மீண்டும் நடமாட்டம்-வனத்துறை எச்சரிக்கை

கூடலூர் :  கிளன்வன்ஸ் பகுதியில் கொம்பன் காட்டு யானை நடமாட்டம் மீண்டும் காணப்படுவதால் பொதுமக்கள்  எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றியம் ஓவேலி பேரூராட்சிக்குப்பட்ட கிளன்வன்ஸ், ஆரூற்றுப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வந்து நடமாடும் கொம்பன் காட்டு யானை ஒன்று கடந்த 2 வருடங்களில் 4க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கி உள்ளது.

யானையை இப்பகுதியில் இருந்து பிடித்துச் செல்ல வேண்டும் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களும் நடத்தி உள்ளனர். இந்த யானை குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த யானையை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டியதில், கிளன்வன்ஸ் சுடுகாடு மற்றும் கீழ்ஏலக்காடு பகுதியில் ஆற்று ஓரம் யானை முகாமிட்டு உள்ளது.

இந்த யானை நடமாட்டம் காரணமாக திருவள்ளூர் நகர், ஆரூற்றுபாறை, சுபாஷ் நகர், நியூஹோப், செல்வபுரம், ஹோப் மற்றும் பார்வுட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் மிக கவனமுடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் மிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக வெளியில் வருவோர் வனத்துறைக்கு தகவல் அளித்து யானை நடமாட்டம் குறித்து தெரிந்து கொண்ட பின்னரே வெளியில் செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: