சுங்க கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.3  முதல் ரூ.14  கட்டண உயர்வு அமலாகிறது. இதனை கண்டித்து, நேற்று மீஞ்சூர் அருகே சின்னமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் சிஐடியு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை உடனே திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சாலைகளை முழுமையாக சீரமைக்காமல் சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலிக்கபட்டு வருகிறது, காலாவதியான சுங்கச்சாவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வாகனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரிக்கும் நிலையில், வாகன வாடகை அதிகரித்து அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது.  விலை  உயர்வால் மக்கள் பாதிக்கும் சூழலும் உருவாகும். உடனடியாக ஒன்றிய அரசு சுங்கக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார். சிஐடியு மாநில துணைத்தலைவர்கள் விஜயன், விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பூந்தமல்லி: போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று சுங்கக்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகர மோட்டார் வாகனம் தொழிலாளர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டண உயர்வுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த கண்டன போராட்டத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் எதுவும் நடைப்பெறாமல் இருக்க,  மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: