கொள்ளுமேட்டில் சித்த மருத்துவ மையம் திறப்பு: பள்ளி மாணவர்களுக்கு மூலிகை தோட்ட பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

ஆவடி: கொள்ளுமேட்டில் சித்த மருத்துவ மைய திறப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு மூலிகை தோட்ட வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி, கொள்ளுமேடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில்  அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ நல வாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து,  கொள்ளுமேடு அரசு பள்ளியில் இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டத்தை மாநில அளவில்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 385 ஒன்றியங்களில் இந்த திட்டம், நேற்றுமுன்தினம்  முதல் செயல்பட துவங்கியது. அதேபோல் ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும்  இந்த இலஞ்சி மன்றத்தில்  பள்ளி மாணவர்களுக்கு சித்த மருத்துவம் பயன்கள், மூலிகைச் செடி பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து அமைச்சர் பேசினார். மாணவர்களின் ஞாபக சக்திக்காக வல்லாரை மாத்திரை போன்ற தேவையான மாத்திரையும்  வழங்கினார்.

இவ்விழாவில்,  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், திருவள்ளூர் கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், வில்லிவாக்கம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் மோரை தயாளன், மாவட்ட கவுன்சிலர் மோரை சதீஷ்குமார், வெள்ளனுர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் மாணவர்கள், ஆசிரியர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:  சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் விதமாக தமிழகத்தில் 385 ஒன்றியங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா இரு பள்ளிகளை தேர்ந்தெடுத்து 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியும், மூலிகை தோட்ட வளர்ப்பு பயிற்சியும் வழங்க, இலஞ்சி மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ.1,92,50,000 அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், உருமாற்ற ஒமிக்ரான் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு,  மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் 400 முதல் 600 பேருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை 112 பேருக்கு மட்டுமே ஏற்ப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமானநிலையங்கள் மூலமாக தாயகம் திரும்புவோர்க்கு செய்யப்படும் வைரஸ்  சோதனைகளில் பெரும்பாலானோர்க்கு தொற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Related Stories: