மனநலம் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் உணவுப்பொருட்களை விற்க ரூ.5.45 லட்சம் மதிப்பில் வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு: மனநலம் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் உணவுப்பொருட்களை விற்பதற்காக, நடமாடும் உணவக வாகனத்தை கலெக்டர் ராகுல்நாத் கொடியசைத்து  துவக்கி வைத்தார்.

‘தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’  உலக வங்கி நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது. இது ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம். இதன் மூலம், வறுமை ஒழிப்பு என்னும் செயல்பாட்டையும் தாண்டி ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தின் வளம் மற்றும் நிலையான உயர்வினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தை சார்ந்த ‘தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்’ மூலம் டிலைட் மசாலா தொழிற்குழு துவங்கப்பட்டது. இக்குழுவின் மூலம்,  உணவு பொருட்களை டிலைட் மசாலா தொழிற்குழு உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர். இத்திட்டமானது, திருப்போரூர் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய வட்டாரங்களைச் சார்ந்த 119 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கோவளம் ஊராட்சியில் நிறுவனம் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த பயனாளிகளைக் கொண்டு ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’ மூலம் மசாலா குழு  உணவுப்பொருட்களை தொழிற்குழு உறுப்பினர்கள் மூலம் தயாரித்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது.

இது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மின்சாரத்தில் இயங்கும் நடமாடும் உணவகத்தினை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வணிக புதுமையாக்கல் நிதியின் கீழ் டிலைட் மசாலா தொழிற்குழுவிற்கு ரூ.5 லட்சத்து, 45 ஆயிரத்து, 500 மதிப்பீட்டில் நேற்று மின்சாரத்தில் இயங்கும் நடமாடும் உணவக வாகனத்தை,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: