கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை

தண்டையார்பேட்டை: சென்னை கோட்டை புறநகர் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில், கோட்டை ரயில் நிலையம் என எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர். நேற்று காலை இதுபற்றி அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, ரயில்வே துறைக்கு சொந்தமான பெயர் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 பறக்கும் ரயில் செல்லும் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே வழித்தடத்தின் ஐந்தாவது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக்கூடாது என்றும், தாஹி என்று இந்தியில்தான் எழுத வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: