துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி

சென்னை: சென்னை மாநகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துப்புதுலக்கப்படாத கொலை வழக்குகளை தூசு தட்டி விசாரிக்க, சிறப்பு துப்பறியும் காவல் படை அமைத்து விடப்பட்டுள்ளது.  சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும், பழைய குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதற்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கடந்த 10 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருக்கும் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் துப்பறியும் படை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள போலீசார் மிகவும் நுட்பமாக துப்பறியும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக தகவல்களை திரட்டுவதில் கைதேர்ந்த காவலர்களும் இந்த சிறப்பு படையில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் துப்பு துலக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சுமார் 30 கொலை வழக்குகளை தூசு தட்ட தொடங்கி உள்ளனர்.  கொலை சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் ஆதாரங்களை நவீனப்படுத்தி அதன் மூலமாக அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விடவும் இந்த சிறப்பு தனிப்படை முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரில் நடந்த துப்பு துலங்காத பழைய கொலை வழக்குகளுக்கு உயிர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் பழைய வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படாமல் இருந்தால் முடிந்து போன வழக்குகளுக்கு மீண்டும் உயிரூட்டுவது என்பது சிக்கலாகவே இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்துள்ள பேட்டியில், நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையை இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த படையில் பணிபுரிய திறமையான இளம் காவலர்கள் ஆர்வமுடன் சேர்ந்துள்ளனர்.  15 நாட்களுக்கு ஒருமுறை கொலை வழக்குகளின் நிலை என்ன என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்று சென்னை மாநகர காவல் துறையில் துப்பு துலங்காமல் இருக்கும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 6 பெண்களின் கொலையில் எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது. அதாவது 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி கே.கே.நகரில் பரிமளம் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இவரது கணவர் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தனியாக இருந்த பரிமளம் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் கொலையாளிகள் திருடிச் சென்றனர். இந்த கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் துப்பு துலங்காமலேயே உள்ளது.

2007ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி வேளச்சேரி சங்கர் அவென்யூ இந்திரா தெருவில் வசித்து வந்த வேக்கப் மேரிவேக்கப் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இன்னும் துப்பு துலங்காமலேயே உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.  2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோடம்பாக்கம் பாரதீஸ்வர காலனி பகுதியில் பரமேஸ்வரி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சுமார் 12 ஆண்டுகளாகியும் எந்தவித துப்பும் கிடைக்காமலேயே உள்ளது.  இந்த கொலை சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே ஆதிலட்சுமி என்கிற துணை நடிகை ஒருவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையும் கிணற்றில் போட்ட கல்லாகவே மாறிப்போனது.

2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கே.கே.நகர் நெசப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ரஞ்சிதா என்கிற பெண் கொலை செய்யப்பட்டார். கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்திலும், கொலையாளிகள் யார் என தெரியாமல் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரம்பூரில் சுமதி என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணையும் துப்பு எதுவும் கிடைக்காமல் முடக்கப்பட்டிருந்தது. இப்படி மேற்கண்ட 6 பெண்களை கொன்றவர்களும் யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில் போலீசாரும் அது தொடர்பான பதிவேடுகளை கிடப்பில் வைத்திருந்தனர். இந்த பதிவேடுகள் அனைத்தும் தற்போது தூசு தட்டி எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: