சென்னையில் கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 324 ரவுடிகள் கைது: ‘தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு’ அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஏ பிளஸ் மற்றும் ஏ பிரிவு ரவுடிகளான 324 பேரை தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு போலீசார் ஓராண்டில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள், 100க்கும் மேற்பட்ட பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்றும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து கமிஷனர் சங்கர் ஜிவால் மாநகரம் முழுவதும் கொலை, ஆள்கட்டத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஏ பிளஸ் மற்றும் ஏ பிரிவு ரவுடிகள் மற்றும் தாதாக்களை கைது செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு’ என்ற புதிய பிரிவை தொடங்கினார். மாநகர காவல்துறையில் உள்ள  மாநகர வடக்கு மண்டலத்திற்கு சிறப்பு பயிற்சி பெற்ற உதவி கமிஷனர் ராயப்பன் ஏசுநேசன் மேற்பார்வையில் வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டன.

அதேபோல், மாநகர தெற்கு மண்டலத்திற்கு ‘தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு’ உதவி கமிஷனராக குமரகுரு மேற்பார்வையில் தெற்கு மண்டல இன்ஸ்பெக்டராக ரங்கநாதன், கிழக்கு மண்டல இன்ஸ்பெக்டராக பிரபு ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டன.   புதிதாக அமைக்கப்பட்ட தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகள் யார் தலையிடும் இல்லாமல், நேரடியாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கட்டுப்பாட்டில் இந்த பிரிவு இயங்கி வருகிறது. இந்த தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவினர் சென்னையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பல ஆண்டுகள் மற்றும் பல மாதங்களாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் நிழல் உலக தாதாக்களை கண்ாணித்து கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர வடக்கு மண்டல பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புயை  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடும் குற்றவாளிகளான ‘ஏ பிளஸ்’ பிரிவை சேர்ந்த துப்பாக்கி கார்த்தி, பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷ், 140 ரவுடிகளை பிறந்த நாள் விழாவுக்கு அழைத்து வான வெடிக்கையுடன் அரிவாளால் கேக் வெட்டிய பிரபல ரவுடி பினு, கரிமேடு அன்பு, வெள்ளை பிரகாஷ், பால் பிரவீன், வாட்டர் வாஸ் குமார், ராம்கி, பல்லு சதீஷ், ரஜினி பட்டா கத்திகளுடன் கைது செய்தனர்.  இதில் குறிப்பிடும்படியாக, பெரிய அளவில் குற்றம் செய்ய தீட்டமிட்டு கொடுங்கையூர் பகுதியில் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் காரில் சென்று பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவனது கூட்டாளி அப்பு(எ)விக்ரமாதித்தன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, 12 குண்டுகள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்மையில் செம்பியம் பகுதியில் இளங்கோவன் என்பவரை கொலை செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் குற்வாளியான  ரவுடி கணேஷ், கவுதம் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடி, கொடுங்கையூர் மற்றும் புழல் பகுதிகளில் கத்திகளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள் கிஷோர், கலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரகசிய தகவலின் படி தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவினர் கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகளான ராம்கி, வெள்ளை சரவணன் ஆகியோரை கைது செய்து 3 ெகாலைகள் தடுக்கப்பட்டது.  அதேபோல், சென்னை மாநகர தெற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத வகையில் அதிமுக ஆட்சியில் தாதா மற்றும் ரவுடிகளாக கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த ‘ஏ பிளஸ்’ பிரிவை சேர்ந்த சீசிங் ராஜா, பிரகாஷ்(எ)பாம் பிரகாஷ், பிரபல தாதா சிடி மணியின் கூட்டாளியான வினோத்குமார், தேவசகாயம், பாலாஜி(எ)ஆர்டிஆர் பாலாஜி, சத்யா( எ)பாம்பே சத்யா, ராபின், கிருஷ்ணமூர்த்தி(எ) கஞ்சா கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன்(எ) மாறா, தொடர் செயின் பறிப்புகளில் ஈடுபட்டு வந்த டில்லிபாபு, அபினேஷ், கார்த்தி ஆகியோரை ‘தீவிர குற்றவாளிகள் தடுப்பு தெற்கு பிரிவினர் கைது செய்தனர்.

குறிப்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த பிரபல தாதா பாலமுருகன்(எ) மதுரை பாலா என்பவரை கொலை செய்யும் வகையில் கத்தியால் குத்திய ரவுடி விக்னேஷ்(எ)ஜிந்தா மற்றும் சிடி மணியின் கூட்டாளியான வினோத்குமார் ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். கொலை உள்ளிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த வேளச்சேரி சசிநகரை சேர்ந்த ரவுடி இருளா(எ)கார்த்திக்(27), ஆதம்பாக்கம் வள்ளலார் தெருவை சேர்ந்த சிஷி(எ)மணிவண்ணன்(28), பள்ளிக்கரனை பாலாஜி நகரை சேர்ந்த ஊசி உதயா(25), அம்பேத்கர் நகர் 7வது தெருவை சேர்நத் ராபின்(29), பெரும்பாக்கம் 5வது தெருவை சேர்ந்த நவீன்குமார்(23) உள்ளிட்ட சரித்திர பதிவேறு ரவுடிகள் கைது செய்யப்பட்டது.  இந்த வகையில் கடந்த ஓராண்டில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு தீவிர குற்றவாளிகள் பிரிவினரால் 39 ‘ஏபிளஸ்’ ரவுடிகள், 101 ‘ஏ’ பிரிவு ரவுடிகள், 140 பி மற்றும் சி பிரிவு குற்றவாளிகள் என 280 ரவுடிகள் மற்றும் 44 குற்றவாளிகள் என மொத்தம் சென்னை மாநகர காவல் எல்லையில் 324 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் துப்பாக்கி கார்த்தி, ஆற்காடு சுரேஷ், பினு, கரிமேடு அன்பு, வெள்ளை பிரகாஷ், பால் பிரவீன், வாட்டர் வாஸ் குமார், ராம்கி, பல்லு சதீஷ், ரஜினி, சீசிங் ராஜா, பிரகாஷ்(எ) பாம்பு பிரகாஷ், வினோத்குமார், தேவசகாயம், பாலாஜி(எ) ஆர்டிஆர் பாலாஜி, சத்யா(எ)பாம்பே சத்யா, ராபின், கிருஷ்ணமூர்த்தி(எ)கஞ்சா கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன்(எ)மாறா உள்ளிட்டோர் சென்னையை கலக்கிய ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் ஆவர்.

* செயலி மூலம் கண்காணிப்பு இதுதவிர தீவிர குற்றவாளிகள் தடுப்புபிரிவினர் ‘TRACKD’ என்ற செயலி மூலம் ரவுடிகள், தாதாக்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் பெயர், முகவரி, வழக்குகள், அவர்களின் கூட்டாளிகளின் விபரங்கள், சிறையில் உள்ளாரா? வெளியே உள்ளாரா? போன்ற விபரங்கள் பதிவேற்றம் செய்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: