மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘வேளச்சேரி தொகுதி, பேபி நகர், உதயம் நகர், விரிவாக்கம் பார்க், கரிகாலன் தெரு, வீனஸ் காலனி, முத்துக்குமாரசாமி தெரு, சேஷாத்ரிபுரம், அனகா தெரு, தத்தா தெரு, பிலிம் தெரு, பாரதி தெரு, கம்பர் தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.  அப்பகுதியில் மூத்த குடிமக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தரமணி சாலையில் வடக்குப் பகுதியில் இருக்கக்கூடியது பேபி நகர். இந்த மக்கள், சாலையை கடந்து தெற்கே தரமணியில் வந்த ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலைமை இருக்கிறது. எனவே அப்பகுதியில் எங்களுக்கு ரேஷன் கடையை அமைத்துத் தர வேண்டும்.

பார்க் அருகே ஆவின் பால் பூத் இருக்கிறது. அந்த பார்க் அருகே இன்னொரு ரேஷன் கடையை நீங்கள் கட்டித் தர வேண்டும். எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து அதற்கான நிதியை ஒதுக்க தயாராக இருக்கின்றேன். ஆனால், அந்த இடம் நகராட்சி நிர்வாகத் துறையின்கீழ் வருகிறது. அந்த இடத்தை கொடுத்தால் நிச்சயம் அப்பகுதியில் எங்களுக்கு ரேஷன் கடை வந்துவிடும்,’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ‘‘சீனிவாசபுரம் விஜயநகரத்தில் இருக்கும் கடையில் 2,208 குடும்ப அட்டைகள் உள்ளன. அதிலிருந்து 910 அட்டைகளைப் பிரித்து புதிய கடையை பேபி நகர் பகுதியில் திறக்க இன்றே ஆணை வழங்கப்படும். எனவே, உறுப்பினர் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இடத்தைத் தேர்வு செய்தால், மாநகராட்சி இடமாக இருந்தாலும் சரி, ஆவின் இடமாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் நீங்கள் கொடுத்தாலும், அந்த இடத்திலே கட்டுவதற்கு கடை அனுமதி கொடுத்துவிகிறோம். அதேசமயத்தில், தண்டீஸ்வரம் பகுதியில் உள்ள இரு கடைகளில் ஒன்று அந்த கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பேபி நகர் அல்லது டான்சி நகர் பகுதிக்கு மாற்றப்படும்,’’ என்றார்.

அசன் மவுலானா: சாஸ்திரி நகர், தாமோதரபுரம், அடையாறு பரமேஸ்வரி நகர், ஊரூர்குப்பம், பழண்டியம்மன் கோயில், திடீர் நகர் ஆகிய பகுதிகளுக்கு சேர்த்து 7 கடைகள் ஒரே இடத்தில் இருக்கிறது. இந்தப் பகுதி கடைகளை நீங்கள் அதே பகுதியில் அமைத்து தர வேண்டும். அமைச்சர் சக்கரபாணி: எந்த கடை, அதில் எத்தனை குடும்ப அட்டைகள் இருக்கின்றன என்பதை உறுப்பினர் எழுதி கொடுத்தால், அதற்கும் உரிய நடவடிக்கை எடுத்து அந்த கடையை பிரித்து தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: