அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5.86 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை பெண் ஊழியர் கைது: உரிமையாளர்கள் உட்பட 5 பேருக்கு வலை

அண்ணாநகர்:  சென்னை முகப்பேரில்  ஏஆர்டி என்ற பெயரில் நகை மற்றும் அடகுக்கடை, சூப்பர் மார்க்கெட், எலக்ட்ரானிக் கடை, ஜிம், சலூன், ரெஸ்டாரண்ட் ஆகியவை செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின். ஊழியர்களாக வீமா, பிரியா, சமீர், சமீர்ஜவகர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், நகைக்கடையில் ஒரு லட்சம் செலுத்தினால் வாரம் ரூ.3 ஆயிரம் வட்டியும், மாதம் 12,000 ஆயிரம் வட்டியும் தருவதாகவும், பாதி விலைக்கு தங்கம் தருவதாகவும், வட்டியில்லாமல் நகைக்கடன் பெறலாம் என்றும் உரிமையாளர்கள் விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி பலர் நகைக்கடை மற்றும் அடகுக்கடையில் ரூ.1 லட்சம் வரை செலுத்தியுள்ளனர்.

அந்த வகையில் ரூ.5.86 கோடி வரை வசூலித்தனர். இதற்காக, வாரம்தோறும் 3 ஆயிரம் மற்றும் மாதம்தோறும் ரூ.12,000 ஆயிரம் பெற்று வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, வட்டி பணம் கொடுக்காததால், இதுபற்றி வாடிக்கையாளர்கள்  கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் இதுகுறித்து, நொளம்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடைகளை பூட்டிவிட்டு உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தலைமறைவாகினர். இதை கேள்விப்பட்ட வாடிக்கையாளர்கள் நொளம்பூர் காவல்நிலையத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புழல் பகுதியில் உள்ள பிரியா வீட்டை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, புழல் போலீசார் அங்கு விரைந்து வாடிக்கையாளர்களிடம் விசாரித்தனர். தகவலறிந்த நொளம்பூர் போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து பிரியாவை (30) கைது செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள ஆல்வின், ராபின் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: