சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி படிப்பிற்கு மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி மையம் வேண்டும்: பிரபாகர் ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் உயர் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா பேசியதாவது: சி.ஏ. எனும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி படிப்பிற்கு மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகுப்பு நடத்த வேண்டும். விளையாட்டு துறையில் மாணவன் நன்கு விளங்கினால் எந்த தவறான செயல்களிலும் ஈடுபட வாய்ப்பிருக்காது என்பதால் மாணவர்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்.

மாமன்னர் திருமலை நாயக்கருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும். அடையாறு ஆற்றோரங்கரை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க காணு நகர், சூளைப்பள்ளம், அன்னை சத்யா நகர், ஜம்புலிங்கம் தெரு, கங்கா நகர், வாசுதேவன் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கென அடக்க தளமான கபர்ஸ்தான் இல்லை. எனவே அதற்கான இடத்தை தேர்வு செய்து கபர்ஸ்தான் அமைத்து தர வேண்டும்.

திருவீதியம்மன் கோயில் தெரு - சிவன் கோயில் தெரு, யாதவாள் தெரு, நெசப் பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு  ஆகிய பகுதிகள் கிராம நத்தமாக உள்ளது. அதனை வரையறை செய்து கணினி பட்டா வழங்க வேண்டும். சேமாத்தம்மன் நகர் 1, 2, 3வது செக்டார், பாரதி நகர்  பள்ளிக்கூட தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, மஜீத் நகர் ஆகிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரையப்பத்திரம் வழங்க வேண்டும். சூளைப்பள்ளம் பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரையப் பத்திரம் வழங்கி பட்டா கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய பகுதிகளில் கழிவுநீர்  வடிகால் வசதி அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. உடனடியாக கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து பணிமனையை புதுப்பிக்க வேண்டும். கோயம்பேடு பகுதியில் விளையாட்டு அரங்கம்  அமைத்து தர வேண்டும். கலைஞர் கருணாநிதி நகர் அரசு புறநகர் மருத்துவமனையை பன்னோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றி தர வேண்டும். கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நகரில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காசி திரையரங்கம் அருகில் தரைப்பாலம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்டு 12 ஆண்டுகளாகி விட்டது. எங்கள் தொகுதிக்கென சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இல்லை. தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருவதால் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க வேண்டும். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்  உணவுப்பூங்கா அமைக்க வேண்டும். கோயம்பேடு மார்கெட்டை தரம் உயர்த்த வேண்டும். நடேசன் நகர் பூங்காவை சீரமைத்து தர வேண்டும். கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: