அண்ணனை மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே ஆஹா ஓஹோ என்கின்றனர்: புலிவாலை பிடித்த போட்டாவை பார்த்து அசந்து போனேன்; செல்லூர் கே.ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசால் சிரிப்பலை

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை (மேற்கு) தொகுதி எம்எல்ஏ செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ``மதுரைக்கு எந்தவொரு தொழிலும் இல்லை. அதாவது, மெட்ரோ ரயில் வேறு வருகிறது என்று சொல்கிறார்கள். அதற்கான பூர்வாங்கப் பணிகளை எடுக்கிறார்கள். ஆனால், எந்த தொழிலும் இல்லாமல் மெட்ரோ ரயில் வந்து என்ன செய்வது?. ஒரு தொழிற்சாலைக்கூட குறிப்பிடும் அளவிற்கு இல்லை. இப்போதுகூட ரூ.600 கோடியில் அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆகவே, விரைவில் மதுரைக்கு ஏதாவது ஒரு தொழில், எல்லோரும் பாராட்டுகின்ற அளவிற்கு, தொழில் துறை அமைச்சர் கொண்டு வர வேண்டும். மதுரை மக்கள் எல்லோரும் ஆஹா, ஓஹோ என்று தங்கம் தென்னரசுவை பாராட்ட வேண்டும்” என்றார்.

சபாநாயகர் அப்பாவு: 10 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். ஒரு தொழில்கூட இல்லை என்று வருத்தப்படுகிறீர்கள். இந்த அமைச்சராவது தருவாரா என்று பார்ப்போம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:  உள்ளபடியே மதுரை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களே அண்ணனைப் பார்த்து ஆஹா, ஓஹோ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானே அசந்து போனேன். கொஞ்ச நாட்கள் முன்னாடி பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு படம் வந்தது. அண்ணன் என்ன செய்தார்கள் என்றால், நாம் எல்லோரும் புலியைப் பார்த்தால் தூர ஓடிப்போய் விடுவோம். மதுரை மண்ணில் எல்லோரும் மாடுகளைத்தான் பிடிப்பார்கள், நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்ணன் செல்லூர் ராஜூ புலி வாலையே பிடித்து வந்து நின்றார். படத்தை எல்லாம் போட்டு பார்த்தால் தெரியும். புலி வாலைப் பிடித்தார். ஆனால் ஒன்று, மதுரைக்காரர்கள் ரொம்ப விவரமாக இருப்பார்கள்.

புலியின் வாய் இருக்கின்ற பக்கம் நிற்காமல், அதன் வால் இருக்கின்ற பக்கம் சென்று அண்ணன் புலியின் வாலைப் பிடித்தார். (இந்த பேச்சால் முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் சிரிப்பலையில் மூழ்கினர்) அவ்வளவு திறமையாக இருக்கக்கூடிய அண்ணன் மதுரைக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று கேட்டு இருக்கிறார். தென் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியிலே நாம் நிறைய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் தான் மதுரைக்கு டைடல் பார்க் ஏறத்தாழ ரூ.600 கோடிக்கு அறிவித்து இருக்கிறார். மதுரையில் ஒரு சிப்காட் தொழிற்சாலை வர உள்ளது. அதிகமான முதலீடுகள் இப்போது தென் மாவட்டங்களை நோக்கி வர தொடங்கியுள்ளது. மதுரையும் நிச்சயமாக அதில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: