எண்ணும், எழுத்தும் திட்டத்தை 4, 5ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டத்தை 4, 5ம் வகுப்புகளுக்கு விரிடுபடுத்த ரூ.110 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கண்காணிப்பு மையம் என்பது ஹைடெக் லேப் மூலமாக குழந்தைகளுக்கு அதிகளவில் டெஸ்ட் வைத்துக் கொண்டே இருக்கிறோம். எந்தப் பள்ளியில், எந்த மாணவன், எவ்வளவு செயல்பாடு செய்திருக்கிறான் என்பதை தனித்தனியாக ஆக அந்த எண்களை வைத்து கண்டுபிடிப்பது, எந்த பள்ளியில் எந்தளவிற்கு ரிசல்ட் வந்திருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு இந்த கண்காணிப்பு மையம் இருக்கிறது.

மாணவ, மாணவியர் அறிவு சார்ந்த சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்பதற்காக வானவில் மன்றம் கொண்டு வருகிறோம். 710 கருத்தாளர்களைக் கொண்டு அவர்களை கொண்டு செல்கிற பணியையும் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். முதல்வர் தொடங்கி வைத்த, நான் முதல்வன் திட்டம் என்பது எதற்கு? கிராமத்தில் இருக்கின்ற பெற்றோர்கள் அடுத்து நம்முடைய பிள்ளை என்ன படிக்க வேண்டும் என்று தெரியாது. ஏதோ படிக்கிறான், பள்ளிக்குப் போகிறான், அப்படியில்லாமல் ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து முதல்வர் அதை உருவாக்கியுள்ளார். என்னென்ன படித்தால் என்னென்ன வேலை கிடைக்கும், என்னென்ன வேலைக்குப் போனால் என்னென்ன சம்பளம் கிடைக்கும் என எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. பள்ளி மேலாண்மை குழுவை எல்லா பள்ளிகளிலும் நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.  

எண்ணும் எழுத்தும் திட்டம், கடந்த ஆண்டு இதை சுமார் ரூ.67 கோடியில் நடைமுறைப்படுத்தினோம். இன்றைக்கு அதனுடைய ரிசல்ட்டை பார்த்துவிட்டு, இதை 4, 5ம் வகுப்புகளுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும், அதற்கென்று இன்றைக்கு கிட்டத்தட்ட ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சமுதாயத்தை எந்த நாடு போற்றுகிறதோ அந்த நாடு வளர்ந்த நாடாகதான் இருக்கும். ஆசிரியர்களை திமுக ஆட்சி ஒருபோதும் கைவிடாது. இது உங்களுக்கான அரசாங்கம். ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத நிலை விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: