ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டம்: வரும் 11ம் தேதி நடக்கிறது

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின்படி, முதல்வரை தலைவராக கொண்டு நிதித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருடன் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் 19.8.2021ல் முதல் கூட்டம் மற்றும் 12.4.2022ல் இரண்டாவது கூட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து, அடுத்த கூட்டம் 11.4.2023 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது. வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்த சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தை செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்கள், அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: