தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் விவகாரம் சட்டப்பேரவையில் காரசார விவாதம்: அமைச்சர்கள் ராமச்சந்திரன், மதிவேந்தன் பதில்

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில்தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர், டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்: 1967ல், தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக, கலைஞர் அந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்க வேண்டுமென்ற சூழலில் நீலகிரி மாவட்டத்தில் சற்றேறக்குறைய 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்களை ஆரம்பித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே 2 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு மேற்பட்ட தோட்டத்தை வனத்துறை வசம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களுக்கு கொடுக்க ரூ..29 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். ஒரு பைசாகூட பாக்கியில்லாமல் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறோம்.

பொன்.ஜெயசீலன் (அதிமுக): தேயிலை விலை வீழ்ச்சியின் காரணமாக, அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற காரணத்தை வைத்து, சுமார் 5,314 ஏக்கர் தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைவு செய்திருக்கிறார்கள்.

சபாநாயகர்: வனத்துறைக்கு முதலில் ஒப்படைத்தது நீங்கள் தான் என்று சொல்லிவிட்டார்கள்.

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்: 1964ம் வருடம் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மாவோ சாஸ்திரி ஒப்பந்த உடன்படிக்கையின்படி தாயகம் திரும்பிய இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு டேன் டீ படிப்படியாக 4 நிலைகளில் தேயிலை பயிரிடுவதற்காக நிலங்கள் குத்தகை அடிப்படையில் வனத் துறையிடமிருந்து பெறப்பட்டன. மொத்தம் 6,496.52 ஹெக்டேர் வனத்துறையிடமிருந்து டேன் டீக்கு ஒப்படைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 1907 ஹெக்டேர் டேன் டீயிலிருந்து வனத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நம்மால் 599.2 ஹெக்டேர் மட்டும்தான் திருப்பி டேன் டீ நிறுவனத்திடமிருந்து வனத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு ஓய்வுபெற்ற பின்னர் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை அமைத்து தருவதற்காக, முதற்கட்டமாக 72 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கூடலூர் பகுதியிலே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து டேன் டீ நிறுவன தொழிலாளர்களுக்கும் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதற்காக, முதல்படியாக அவர்களுக்கு வீடுகள் வழங்க அரசு அறிவித்துள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்கீழ் டேன் டீ நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 573 வீடுகள் உடனடியாக வழங்க வேண்டுமென்று முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதில், முதற்கட்டமாக கிட்டத்தட்ட ரூ.1,342 லட்சம் அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், டேன் டீயில் இருக்கிற செலவுகளைக் குறைக்க வேண்டுமென்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டேன் டீயில் இலைப் பறிப்பு அளவுக்கு தேவையான தற்காலிக தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

Related Stories: