2,996 நடுநிலைப்பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

பேரவையில் நேற்று பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

* தமிழ்நாட்டில் 2,996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலை பள்ளிகளில் ரூ.175 கோடியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

* மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்கப்படுத்த மாபெரும் வாசிப்பு இயக்கம் ரூ.10 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

* வரும் கல்வி ஆண்டில் இரண்டாவது கட்டமாக ரூ.150 கோடி மதிப்பில் 7,500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

* வேலைவாய்ப்புக்காக தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து வரும் பிற மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய்மொழியுடன் தங்கு தடையின்றி தமிழ் பேசவும், எழுதவும் ஏதுவாக ‘தமிழ் மொழி கற்போம்’ திட்டம் தொடங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த ரூ.8 கோடியில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்.

* நடுநிலைப் பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தால் அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தபட்சம் 1, அதிகபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் வழங்கப்படும்.

* புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது 11 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

* பாரம்பரியமிக்க தேசிய நூலகமான கன்னிமாரா பொது நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள், குழந்தைகள், சொந்த நூல்கள் படிப்போர் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பில் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும்.

Related Stories: