அனைத்து மாநகராட்சி, டெல்டா மாவட்டங்களிலும் மின்கம்பிகளை புதைவடமாக மாற்ற அரசு நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘புதைவடங்கள் அமைத்து மின் விநியோகம் செய்ய எதிர்காலத்தில் அரசிடம் திட்டம் ஏதும் இருக்கிறதா?’’ என கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘‘தமிழ்நாடு  மின்சார வாரியத்தின் வரலாற்றில் முதன்முறையாக மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்துவதற்கான அனுமதிகளை முதல்வர் வழங்கியிருக்கிறார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள 7 மண்டலத்தில் புதைவடங்கள் அமைக்கின்ற பணிகளுக்கான டெண்டர் கோரப்படும் பணிகள் நிலுவையில் இருக்கின்றன. படிப்படியாக மாநகராட்சிப் பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும், அந்த பணிகளைச் செய்திட வேண்டும் என்று ஆய்வு கூட்டங்களின் போதும் முதல்வர் துறைக்கு உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்” என்றார்.

* அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் சிப்காட் பூங்கா அமைக்க என்ன வசதிகள் தேவை?

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்(திமுக), ‘‘திருப்புலிவனம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட அரசு நிலங்கள் உள்ளன. அதில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு ஆவன செய்யப்படுமா?’’ என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘சிப்காட் அமைய வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் தண்ணீர், மின்சாரம், நில அமைப்பு, ரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தொழில் மனை தேவைகளும் இருப்பதை கருத்தில் கொண்டு, சிப்காட் அமைப்பதற்கு அரசு முன்வருகிறது. உறுப்பினர் சொல்லக்கூடிய அந்தப் பகுதிகளை ஏற்கெனவே நானும் ஒரு முறை அவருடன் சென்று பார்த்திருக்கிறேன். அது சிப்காட்டை உருவாக்குவதற்கு உகந்த இடமாகவே இருக்கிறது என்பதை அறிவேன். எனவே, வரக்கூடிய காலங்களில் அங்கே ஒரு சிப்காட் பூங்காவை உருவாக்குவதற்கு அரசு நிச்சயமாக ஆவன செய்யும்’’ என்றார்.

* காங்கிரஸ் எம்எல்ஏ பேசும்போது சக உறுப்பினர்கள் அவையில் இல்லை

உயர் கல்வி துறை, பள்ளி கல்வி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் காரைக்குடி மாங்குடி (காங்கிரஸ்) பேசினார். அவர், மதியம் 12.29 மணிக்கு தனது பேச்சை தொடங்கும்போது, மொத்தம் உள்ள 17 காங்கிரஸ் உறுப்பினர்களில், விஜயதாரணி மட்டுமே சபையில் இருந்தார். ஒரு கட்சி உறுப்பினர் சட்டப்பேரவையில் பேசும்போது, அக்கட்சியை சேர்ந்த பிற உறுப்பினர்களும் அவையில் இருப்பார்கள். அப்போதுதான், அந்த உறுப்பினர் உற்சாகமாக தன் கருத்துகளை முன்வைக்க முடியும். ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணை தலைவர் ராஜேஷ்குமார் உள்பட 15 உறுப்பினர்கள் அவையில் இல்லை. இறுதியாக, மாங்குடி எம்எல்ஏ பேசி முடிக்கும்போது, அக்கட்சி உறுப்பினர் ராமச்சந்திரன் மட்டும் உள்ளே வந்தார். இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

* தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க ஜி.கே.மணி வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது: தமிழகத்தில் 22,831 அரசு தொடக்க பள்ளிகள், 6,587 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகள் இருக்கிறது. இந்த பள்ளிகளில் 69 ஆயிரத்து 649 ஆசிரியர்களே பணியாற்றுகின்றனர். 97 ஆயிரத்து 211 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது. எனவே, தேவையின் அடிப்படையில் அதிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கல்விக்கு நிதி ஒதுக்குவதை முதலீடாக பார்க்க வேண்டும். பாடங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்யும் நிலையில் உள்ளனர். மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் பாடத் திட்டம் இருக்க வேண்டும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழில் படிக்க தெரியாமல் பட்டப்படிப்பு வரை செல்லும் நிலை உள்ளது. கட்டாய தமிழ் பயிற்சி மொழி சட்டத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* விசிக எம்எல்ஏ வலியுறுத்தல் அரசு உதவிபெறும் பள்ளியிலும் காலை உணவு திட்டம்

நாகப்பட்டினம் தொகுதி உறுப்பினர் முகமது ஷா நாவாஸ்(விடுதலை சிறுத்தைகள் கட்சி) பேசியதாவது: காலை உணவுத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கின்றேன். கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளின் தரம்  உயர்த்தப்படவில்லை. அதாவது, தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவோ, நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவோ, உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவோ தரம் உயர்த்தப்படவில்லை. எனவே, பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். 20 மாதங்களில் 31 புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கு இந்த அரசு அனுமதி அளித்து தொடங்கப்பட்டிருக்கிறது. அதை நாம் வட்டாரத்திற்கு ஒரு கல்லூரி என்கிற அளவிற்கு கொண்டு போக வேண்டும். பாடத் திட்டங்களில் நாம் மிக முக்கியமாக இடஒதுக்கீட்டினுடைய வரலாற்றை கொண்டு வந்து இடஒதுக்கீட்டை நாம் எப்படி அடைந்தோம், சமூக நீதியினுடைய விளைவு என்ன என்பதைப் பற்றிய விரிவான கருத்துகளை பாடத்திட்டங்கள் மூலம் சொல்லி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: