நாங்க புது எம்எல்ஏ எங்களுக்கு எதுவும் தெரியாது: பேரவையில் வெகுளியாக பேசிய பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி(அதிமுக) பேசுகையில், தர்மபுரி ஒன்றியம், உங்கராளஅள்ளி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு முன்வருமா? எனது தொகுதியில் உள்ள வடகரை பகுதியில்- ஏற்கெனவே நான் இங்கே பேசுகிறபோது, அதென்ன 3 ஆயிரம் மாடு, 30 ஆயிரம் லிட்டர் பால் என்று தாங்களே விளையாட்டாகச் சொன்னீர்கள். வடகரை பகுதியில் பால் அதிகமாக உற்பத்தியாகிறது.

சோளக்கொட்டாய் பகுதியில், சற்று, இந்த அரசு இதை கவனிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவமனையை, சோளக்கொட்டாய் பகுதியில் கால்நடைக் கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும். ஒருசில எம்.எல்.ஏ-க்கள் இங்கு புதிதாக வந்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு எதுவும் தெரியாது. கால்நடை மருத்துவமனை வேண்டுமென்று கேட்கிறார்கள், நாங்களும் எழுதிவிடுகிறோம். கால்நடை கிளை நிலையம் என்று எழுதுவதற்கு நாங்கள் மறந்துவிடுவோம். ஆக,  அமைச்சர்  அதை மட்டுமே பாயிண்ட் ஆக வைத்துக்கொண்டு, கால்நடை மருத்துவமனை அமைக்க இயலாது என்று பதில் சொல்லிவிடுகிறார்கள். கால்நடை கிளை நிலையம் அமைத்துத் தர வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: பதில் எப்படி சொல்ல வேண்டுமென்று அமைச்சருக்கு தெரியும்.

ஆ.கோவிந்தசாமி: ஆமாம். கால்நடை கிளை நிலையம் அமைத்துத் தர இந்த அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்: உறுப்பினர் சொல்கின்ற கணக்கின்படி, கால்நடைக் கிளை நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, நிதிநிலைமைக்கேற்ப தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: