சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஜாமீன் கோரி மனு தாக்கல்: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கில், வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளேன். இந்த வழக்கில் முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் சிபிஐ தரப்பில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பலமுறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், மனுதாரர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கு குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்.10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: