அதிமுகவில் இருந்து நீக்கியதை ரத்து செய்து இடைக்கால நிவாரணம் தர வேண்டும்: மேல்முறையீட்டு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்; வரும் 3ம் தேதி முடிவெடுப்பதாக உயர் நீதிமன்றம் தகவல்

சென்னை: அதிமுக பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள  மனுக்களின் மீது இறுதி விசாரணை நடத்துவதா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்குவதா என்பது குறித்து  வரும் திங்கட்கிழமை முடிவெடுப்பதாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் மறுத்து தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு மார்ச் 28ல் அளித்த தீர்ப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டுமென்று கோரியிருந்தனர்.

இந்த மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி,  கட்சியில் இருந்து நீக்கம் செய்த நடவடிக்கைகள் அனைத்து் விதிகளுக்கு எதிரானது. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொது செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டிருக்க முடியும் என்று வாதிட்டார். வைத்திலிங்கம் தரப்பிலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி மற்றும் அதன் தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பொது செயலாளர் தேர்தல் நடத்தபட்டது. பலமுறை ஆளும்கட்சியாகவும், தற்போது எதிர்க்கட்சியாகவும் உள்ள ஒரு கட்சி தேர்தலை திறம்பட சந்திக்க வேண்டும். சட்டமன்றத்திலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை கட்சி சார்பில்லாதவர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு இருக்கையை மாற்ற வேண்டும் எனக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் மனுதாக்கல் செய்ய குறைந்தபட்சம் 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அந்த அளவு ஆதரவு இல்லாத நிலையில் அவரால் எப்படி போட்டியிட மொத்தமுள்ள 70 மாவட்ட செயலாளர்களில் 60க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் எதுவும் அளிக்க வேண்டியது இல்லை. வழக்கை இறுதி விசாரணைக்கு பட்டியலிடலாம் என்று வாதிட்டார்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என்று எப்படி கூறுவீர்கள் என்றார்.

வைத்திலிங்கம் தரப்பில், இரு பதவிகள் காலியாகிவிட்டன என்று தேர்தல் ஆணையத்திற்கு சொன்ன நிலையில், அதற்கு பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் அந்த பதவிகளை நிரப்பி இருக்க வேண்டும் அல்லது இடைக்கால ஒருங்கிணைப்பாளர், இடைக்கால இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை நியமித்திருக்க வேண்டும். ஒரே ஒருவருக்காக கட்சியின் விதிகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது, புறந்தள்ளப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதைதொடர்ந்து, அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டுமா அல்லது இறுதி விசாரணை நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: