ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: திரையுலகினர் கடும் கண்டனம்

சென்னை: ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதி மறுத்த விவகாரத்தில் திரையுலகினர் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் ரோகிணி தியேட்டர் உள்ளது. இங்கு நேற்று பகல் காட்சியை பார்க்க நரிக்குறவ பெண் ஒருவர் சிறுவர், சிறுமிகளுடன் தியேட்டருக்கு வந்தார். அவர் காசு கொடுத்து டிக்கெட்டுகளும் வாங்கியிருந்தார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க தியேட்டர் ஊழியர் மறுத்தார். அங்கிருந்த ரசிகர்கள் இந்த செயலை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. தியேட்டர் நிர்வாகமும் அந்த பெண்ணையும் சிறுவர்களையும் அனுமதிக்கவில்லை.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் வெளியிட்டார். அது வைரலானது. இதையடுத்து இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார். மதுரையில் நிருபர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, ‘எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்கு படைக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது’ என்றார். இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று வெற்றிமாறன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, ‘அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது’ என கூறினார்.

Related Stories: