பல் பிடுங்கிய போலீஸ் அதிகாரி விவகாரம்: ஏப்ரல் 10ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக சாட்சியம் அளிக்கலாம்.! விசாரணை அதிகாரி தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டம், அம்பை சரகத்தில் ஏஎஸ்பி ஆக இருந்த பல்வீர் சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பேசிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த விசாரனை கமிஷனால் முன்பு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட லெட்சுமி சங்கர், சூர்யா, வெங்கடேஷ் ஆகிய மூவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த மார்ச் 27ல் லெட்சுமி சங்கர் சப் கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் ஆஜராகி விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மாலை கல்லிடைக்குறிச்சி எஸ்ஐ ஆப்ரகாம் ஜோசப், தலைமை எழுத்தர் மற்றும் 2 பெண் காவலர்கள் உள்பட 4 பேர் சப்-கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தனர். பின்னர் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியால் பாதிக்கப்பட்டதாக கூறிய சிவந்திபுரத்தை சேர்ந்த இளையபெருமாள் என்பவரது மகன்கள் செல்லப்பா, இசக்கிமுத்து, மாரியப்பன், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாரியப்பன், ஜான் மகன் ரூபன் (எ) அந்தோணி, சிங்கம்பட்டியை சேர்ந்த இசக்கி மகன் சுபாஷ் ஆகிய 6 பேர் சப்-கலெக்டரிடம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது புகார் அளிக்க வந்தனர்.

ஆனால் திடீரென சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம் மட்டுமே விசாரணை செய்யப்படும் என சப். கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் சம்மன் அனுப்பப்பட்ட வெங்கடேஷ் என்ற வாலிபர் சப்.கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கிடையே சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல் பிடுங்கிய சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் இது தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வருபவர்கள் ஏப்ரல் 10க்குள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப் பூர்வமான மனுவை தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: