சேப்பாக்கம் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண சென்ற சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் என்பவர் சேப்பாக்கம் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

சுமார் 40,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டிகளை காணும் அளவிற்கு சேப்பாக்கம் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் இலவசமாக குடிநீர் எடுத்துக்கொள்வதற்கோ, சுத்தமான கழிவறையை பயன்படுத்துவதற்கோ முறையான வசதிகள் செய்யப்படவில்லை என்று ஏ.எஸ்.சண்முகராஜன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் உணவு பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உட்சபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அடுத்து சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளின்போது ரசிகர்களுக்கு இதே நிலைமை ஏற்படக்கூடாது பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதை தடை செய்ய வேண்டும் எனவும் இலவசமாக குடிநீர் வழங்கவும், சுத்தமான கழிவறை வசதியை ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும் என ஏ.எஸ்.சண்முகராஜன் புகார் அளித்திருந்தார்.

இந்த மனு பொறுப்புதலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கங்கள் தரப்பில் கூறுகையில்; இலவச குடிநீர் அந்தந்த கேலரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குடிநீரை குடிக்க தயங்கும் ரசிகர்கள் தான் தண்ணீரை விலைக்கு வாங்குவதாவும், விதிமீறலில் ஈடுபடவில்லை எனவும் பதில் மனு தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2 வார காலத்திற்குள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை பதிலளிலக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.   

Related Stories: