சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட இருந்தது. அதில் சிங்கப்பூர் செல்ல வந்திருந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.  அப்போது, சென்னையைச் சேர்ந்த 2 ஆண்கள், சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் செல்ல வந்தனர். அவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி  உடைமைகளை முழுமையாக சோதித்தனர். அப்போது அவர்கள் சூட்கேசுகளில் ரகசிய அறைகள் வைத்து, அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை பெரும் அளவு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இருவரின் சூட்கேஸ்களில் ரகசிய அறைகளுக்குள் ரூ.56 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு  2 பயணிகளின் வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்தனர். இதையடுத்து 2 பயணிகளையும், பறிமுதல் செய்த ரூ.56 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் அவர்களை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: