சென்னை அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலையில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னைக்கு அருகில் உள்ள நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரும் ஜூலை மாதம் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதம் முடிந்ததும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் பேசினார்கள்.

பின்னர், சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலுரையின் போது பேசியதாவது: சென்னைக்கு அருகிலுள்ள நெம்மேலியில் நடந்து கொண்டிருக்கும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை 2023-ல் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், நெம்மேலிக்கு அருகிலுள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் ஆலந்தூர், ஆயிரம் விளக்கு மற்றும் கே.கே.நகரிலுள்ள அண்ணா பிரதான சாலை போன்ற பகுதிகளில் கழிவுநீர் கட்டமைப்புகளிலுள்ள குறைபாடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்படி, ஆலந்தூர் பகுதியில் ரூ.127 கோடி மதிப்பீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.53 கோடி மதிப்பீட்டிலும், கே.கே. நகரில் ரூ.46 கோடி மதிப்பீட்டிலும், குறைபாடுகள் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் 17 பகுதிகளில் கழிவுநீர் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 9 பகுதிகளில் ரூ.783 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள 16 பகுதிகளுக்கும் மற்றும் மாதவரத்தில் விடுபட்ட பகுதிகளுக்கும் முந்தைய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது அவற்றிற்கு ரூ.2,288 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2022-23ம் ஆண்டில், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 5,909 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. சென்னை மாநகரில் தற்போது, ரூ.135 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர்  வில்லிவாக்கம் மேம்பாலம், ஸ்டீபன்சன் சாலை பாலம் மற்றும் தி.நகர் ஆகாய நடைபாதை ஆகியன முடியும் தருவாயில் உள்ளன. இதுதவிர, தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலை மேம்பாலம் ரூ.131 கோடியிலும், கணேசபுரம் சுரங்கப் பாதையின் மேல் ரூ.142 கோடியில் மேம்பாலமும், மணலி சாலையில் ஏற்கனவே உள்ள ரெயில்வே சந்திக்கடவு 2பி-க்கு மாற்றாக ரூ.96 கோடியில் மேம்பாலமும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தின் வடக்கு பகுதியில் 343 ஏக்கர் பரப்பளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் தேங்கியுள்ள 66.52 லட்சம் மெட்ரிக்டன் பழைய குப்பை கழிவுகள் உள்ளது. இந்நிலத்தை பயோமைனிங் முறையில் மீட்டெடுக்க ரூ.648 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டம் முடிவுறும்போது 252 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்படும். வடசென்னையின் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி மற்றும் தென்சென்னையில் கோவளம் வடிநிலப்பகுதியில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழும் 135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகரில் உள்ள விக்டோரியா பொதுமண்டபம் அதன் பழைய தொன்மை மாறாமல் புத்துயிர் பெறும் வகையில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: