வீடு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.10 லட்சம் நூதன மோசடி: ஆந்திர வாலிபர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் முருகையா (45). இவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு புகார் கொடுத்தார். அதில், ‘‘எங்கள் வீட்டுக்கு கொத்தனார் வேலை செய்ய வந்த ஒரு வாலிபர் வீடு வாங்கி தருவதாக எங்களிடம் ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.  அதன்படி,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பண மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், வீடு வாங்கி தருவதாக, பண மோசடி செய்த நபர் ஆந்திராவில் கொத்தனார் வேலை செய்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் போலீசார் ஆந்திரா சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்து நடத்திய விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செல்ல வாசதேவர (29) என்பதும், முருகையாவிடம் வீடு வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததும், தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: